அஞ்சிறை-பழம்பெருந் தமிழ்ச் சொல்

வழங்கியவர் கி.சம்பத், காஞ்சிபுரம் . 05 Jul 2020

(Anjirai Pazhamperum Tamizh chol)
(Añciṟai-paḻamperum tamiḻ col)

முன்னுரை:

சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் “அஞ்சிறை” எனும் சொல் நூற்புலவர்களால் கையாளப் பட்டுள்ளது.
தற்போது அதிகம் பயன்பாட்டில் இல்லாத ஒரு பழம்பெருஞ் சொல் ஆகும்.
பதினெண்மேற் கணக்கு என்றழைக்கப்படும் சங்க இலக்கியங்களில் ஒன்றான எட்டுத் தொகையில் அடங்கிய குறுந்தொகை மற்றும் ஐங்குறுநூறு ஆகிய நூல்களில்
இச்சொல் கையாளப்பட்டுள்ளது.

அஞ்சிறை எனும் இச்சொல்லின் பொருளை அறிய இச்சொல்லின் எழுத்துக்களிலிருந்து “அஞ்சி”, “சிறை” என்ற இரண்டு
சொற்களை உருவாக்கிப் பொருள் கொள்வர் சிலர்.

“அஞ்சி” என்பது ஒன்றைக் கண்டு பயந்து நடுங்குவது.“சிறை” என்பது குற்றச்செயல் புரிவோரை அடைத்து வைக்கும் இடம்.

வேறு சிலர் இதனை “அம்”, “சிறை” எனும் இரு சொற்களாக உருவாக்கிப் பொருள் கொள்வர். இங்கு “அம்” என்றால்
அழகிய என்றும் “சிறை” என்றால் சிறகு என்றும் பொருள்.

இன்னும் சிலரோ, இதனை “அகம்”, “சிறை” எனும் இரு
சொற்களாகக் கொள்வர். “அகம்” என்றால் உள்ளிடத்தே என்றும் “சிறை” என்றால் சிறையையுடைய என்றும் பொருள் கொள்வாரு
முண்டு.

எவ்வாறாயினும், சங்க இலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் இச்சொல் எவ்வகையில் எடுத்து ஆளப் பட்டுள்ளது என்பதை
யொட்டி, “அஞ்சிறை” எனும் சொல்லுக்கு சிறந்த பொருளை நாம் அறிய முடியும்.

மணிவாசகர் அருளிச் செய்த “திருவாசகம்” எனும் நூலின் 19-ஆவது பதிகத்தின் 5-ஆவது பாடலில் அம் எனும் சொல்
அழகிய எனும் பொருளில் வந்துள்ளதைக் கண்ணுறலாம்.

"கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்   
மஞ்சன்மருவும் மலைபகராய் - நெஞ்சத்து  
இருள் அகல வாள்வீசி இன்பமரும் முத்தி   
அருளுமலை என்பது காண் ஆய்ந்து."  

இப் பாடலில் வந்துள்ள “அஞ்சுகமே” எனும் சொல் “அம் + சுகமே” எனப் பிரிந்து “அழகிய கிளியே” எனும் பொருளில் வந்துள்ளது.

இவ்வாறாகவே, எட்டுத் தொகை நூல்களுள் ஓன்றான “புறநானூறு” நூலில், பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதியை
இரும்பிடர்த் தலையார் பாடிய பாடல்களில் 3-ஆவது பாடலின் 22-ஆவது வரியில் “சிறை” எனும் சொல் “சிறகு” எனும்
பொருளில் எடுத்தாளப் பட்டுள்ளதைக் காணலாம்.

அப் பாடலாவது:


"செந்தொடை பிழையா வன்க ணாடவர்  
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்   
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும் (3-22)  
உன்ன மரத்த துன்னருங் கவலை   
நின்னசை வேட்கையி னிரவலர் வருவரது"  

இப் பாடலின் மூன்றாவது வரியில் வந்துள்ள “திருந்துசிறை” எனும் சொல் “திருந்து + சிறை” என இரண்டாகப் பிரிந்து
“திருந்திய(அழகிய) சிறகினை யுடைய” எனும் பொருளைத் தருகிறது.

ஆக, மேற்காண் நூற்களினால், 'அஞ்சிறை" என்பது “அம் + சிறை” என்ற இரு சொற்களாகப் பிரிந்து “அழகிய சிறகுகள்”
என்று பொருள் தருவதையே சிறப்பு எனக் கருதலாம்.

அவ்வாறாயின், “அஞ்சிறை” எனும் சொல் “குறுந்தொகை” எனும் இலக்கிய நூலில் எவ்விதம் ஆளப்பட்டுள்ளது என இவண்
காண்போம்.


"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!   
காமம் செப்பாது, கண்டது மொழிமோ;   
பயிலியது கெழீஇய நட்பின்,மயில் இயல்,   	
செறி எயிற்று, அரிவை கூந்தலின்   
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?"    (பாடல் 2. குறிஞ்சி)  

பதவுரை:

கொங்கு - பூந்தாது(பூவின் மகரந்தம்),
தேர் - தேர் நெடுக்கும்,
வாழ்க்கை -வாழும்,
அஞ்சிறைத் தும்பி - அம்+சிறை = அழகிய சிறகுகளை உடைய தும்பி(வண்டு),
காமம் செப்பாது - நான் விரும்பியதைச் சொல்லாது,
கண்டது மொழிமோ - நீ கண்டதைக் கூறு,
பயிலியது கெழீய நட்பின் - பல பிறவிகளிலும் நட்புடன் விளங்கும்,
மயிலியல் - மயில் போன்ற,
செறியெயிற் றரிவை - செறிவு + எயிறு +அரிவை = செறிவான பற்களைக் கொண்ட பெண்,
கூந்தலின் - கூந்தலை விட,
நறியவும் உளவோ - மணமிகுந்த ஏதேனும் உள்ளதோ,
நீ அறியும் பூவே - நீ அறிந்த பூக்களிடம்.

பாடற் கருத்து:

மலர்களில் மகரந்தத்தை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த பூக்களில், என்னுடன் பல
பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போல் அழகுடைய, அழகிய பற்களை யுடைய பெண்ணின் கூந்தலை விட மனமுடையது
ஏதேனும் உள்ளதோ? எனக்குப் பிடித்ததைக் கூற வேண்டாம், நீ கற்று அறிந்ததைக் கூறு.

செண்பகப் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்க இறைவன்(இறையனார்) தருமி மூலம் கொடுத்தனுப்பிய பாடல்.

இனி “அஞ்சிறை” எனும் சொல்லை, சங்க இலக்கிய நூல்களுள் மற்றொன்றான “ஐங்குறுநூறு” நூற் புலவர் எவ்விதம் எடுத்து
ஆண்டுள்ளார் என்பதைப் பார்ப்போம்.

ஐங்குறுநூறு - வேழப் பத்தில் பத்தாவது பாடல் வருமாறு:


அறுசில் கால வஞ்சிறைத் தும்பி  
நுாற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்  
காம்புகண் டன்ன துாம்புடை வேழத்துத்  
துறைநணி யூரனை யுள்ளியென்  
இறையே ரெல்வளை நெகிழ்போ டும்மே (ஐங்குறுநூறு - 20-ஆவது பாடல்)  

பதவுரை:

அறுசில் கால - ஆறு சிறிய கால்களை யுடைய,
அஞ்சிறைத் தும்பி - அழகிய சிறகை யுடைய தும்பி,
நூற்றிதழ் தாமரைப்பூ - நூறு மடல்களை யுடைய தாமரை மலர்,
சினாய் - முட்டைகளை,
சீக்கும் - துடைக்கின்ற,
காம்பு கண்டன்ன - மூங்கிலைக் கண்டார் போன்ற,
தூம்பு - உட்டுளை,
இரையேற் எவ்வளை - முன்கையிற் பொருந்திய ஒளியை யுடைய வளைகள்,
நெகிழ்பு ஓடும்மே - நெகிழ்ந்து ஓடா நிற்கும்,
வேழத்துத் துறை நணியூரனை - வேழம் விளைந்திருக்கும் துறையுடைய ஊரன் அவன்

பாடலின் கருத்து:

ஆறு சிறிய கால்களையும் அழகிய சிறகையும் உடைய தும்பியிடம், வேழம் விளைந்திருக்கும் துறையை யுடைய ஊரன்
அவன் என தன் கதையைக் கூறுகிறாள் தலைவி.

இனி எங்கேனும் தும்பி பட்டாம்பூச்சி போன்ற புள்ளினங்களைக் கண்டால் அஞ்சிறை என்ற சொல் நினைவுக்கு வருமல்லவா!

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்