சிறுபஞ்சமூலம் - சங்க இலக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்

வழங்கியவர் கி.சம்பத், காஞ்சிபுரம் . 22 May 2020

(Cirupanjamoolam - Sanga Ilakiya Padhinenkeezhkanakku nool)
(Ciṟupañcamūlam - caṅka ilakkiya patiṉeṇkīḻkkaṇakku nūl)

இதன் ஆசிரியர் காரியாசன்

  • காரி என்பதே இவரின் இயற்பெயர். ஆசான் என்பது தொழில்பற்றிவந்த பெயராக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
  • இவர் சைனசமயத்தைச் சேர்ந்தவர்.
  • இவர் மற்போர் விரும்பும் மாக்காயனாரின் மாணவர் என்பதால் சிறந்த உடற்கூறு அமைந்தவர் என்பதும், கொடைவள்ளலுமாவார் என்பதும் பின்வரும் பாயிரச் செய்யுள் மூலம் அறியப்படுகிறது.

பாயிரச் செய்யுள்:


*“மல்இவர்தோள் மாக்காயன் மாணாக்கன், மாநிலத்துப்  
பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால், கல்லா, 
மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரியாசான், 
சிறுபஞ்ச மூலம் செய்தான்.”*

பதவுரை:

மல்லிவர்தோள் – மற்போர் விரும்பும் தோள்வலிமை யுடைய,
மாக்காயன் மாணாக்கன் - மாக்காயன் என்பவரின் மாணவன்,
பஞ்சந்தீர் - வற்கடத்தை(பஞ்சம்) தீர்க்கின்ற,
மழைக்கை – மழையைப் போல் ஈகை ஓழுக்கமுடைய,
மா - சிறந்த,
காரியாசான் –காரியாசான்என்பவர்.

நூலமைப்பு:

பதினெண்கீழ்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பாவில் பதினைந்தாவது வரிசை எண்ணாக சிறுபஞ்சமூலம் எனும் இந்நூல் அமைந்துள்ளது.

வெண்பா


*“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்  
பால்கடுக்கங் கோவை பழமொழி –மாமூலம்   
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே  
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.”*

நூற்சிறப்பு:

சிறுபஞ்சமூலம் என்னும் தொடர் ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும்.

அவையாவன:
சிறுவழுதுணைவேர், நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், கண்டங்கத்தரிவேர் என்பனவாம்.

இவைகள் எல்லாம் வேர்களிலிருந்து தயாரிக்கப் பெறும் மருந்துவகைகள். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலம் பேணுமாறு போல,
சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து பொருள்களும் உயிர்நலம் பேணுவன.

இவ்வொப்புமை கருதியே இந்நூல் சிறுபஞ்சமூலம் எனவழங்கப் பெறுவதாயிற்று.

பாடல்:

*“சிறிய வழுதுணைவேர், சின்னெருஞ்சி மூலம், 
சிறுமலி, கண்டங்கத்தரிவேர், நறிய  
பெருமலி, ஓர்ஐந்தும் பேசு பல் நோய் தீர்க்கும்  
அரிய சிறுபஞ்சமூலம்.”*

பெண்டிர்ச் சிறப்பு:

மனைவியின் கடமையைப்பற்றி ஆசிரியர் கூறும் கருத்து போற்றத்தக்கது.

• கணவனின் வருவாயை அறிதல்.
• அவ்வருவாய்க் கேற்பச் செலவு செய்தல்,
• உறவினரை வெறுக்காமல் அன்புடன் வரவேற்றல்,
• விருந்தினரைப் பேணல்(உபசரித்தல்),
• தெய்வவழிபாடு இயற்றல்.

ஆகிய இவையாவும் மனைவிக்குரிய கடமைகளாகும். இக்கடமைகளே பெண்டிர்க்குச் சிறப்பு சேர்ப்பனவாகும்.

பாடல்:

*“வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்  
வெருவாமை வீழ்விருந் தோம்பி - திருவாக்கும்  
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு  
செய்வதே பெண்டிர் சிறப்பு.”* 		(42)          

பதவுரை:
வருவாய்க்கு – தம் கணவரது வரும்படிக்கு,
தக்க - தகுதியாகிய,
வழக்கு அறிந்து - வழங்குதலைத்(செலவைத்) தெரிந்து(செய்து), சுற்றம் பந்துக்கள்(உறவினர்கள்),
வெருவாமை - (தங்கள் கோபச் சொல்லால்) பயந்தொதுங்காமல்,
வீழ்ந்து - (அவர்களை) விரும்பி,
விருந்து ஓம்பி – விருந்தினரைப் பேணி,
திரு ஆக்கும் – செல்வத்தை மென்மேலும் உயரச்செய்கின்ற,
தெய்வத்தையும் - தெய்வத்தையும்,
எஞ்ஞான்றும் - எப்பொழுதும்,
தேற்றம் - தெளிவாகிய,
வழிபாடு செய்வதே – வணங்குதலைச் செய்வதே,
பெண்டிர்சிறப்பு – மாதர்க்குரிய சிறப்புகளாம்.

அருளுடையவனிடத்தில் அறம் சிறக்கும், அவன் ஒருபோதும் பழிபுரியான் என்பன போன்ற அறிய கருத்துக்களை இந்நூலுள் காணலாம்.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்