கவி காளமேகப் புலவர்

வழங்கியவர் கி.சம்பத், காஞ்சிபுரம் . 27 May 2020

(Kavi Kalamega Pulavar)
(Kavi kāḷamēkap pulavar)

முன்னுரை:

சங்ககாலப் புலவர்களின் பாடல்களை பதினெண்மேற் கணக்கு எனும் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு தொகைநூல்களில் காணலாம்.
சங்கம் மருவியகாலப் புலவர்களின் பாடல்களை பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் காணலாம்.
அதுபோலவே, பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த புலவர்களின் பாடல்களைத் தனிப்பாடல் திரட்டில் காணலாம்.
இத்திரட்டில் காளமேகப் புலவரின் பாடல்களையும் காணலாம்.

பாடல்கள் அனைத்தும் சொற்சுவை மிக்கவை; எளிமை வாய்ந்தவை மற்றும் இனிமை நிறைந்தவை.

பிறப்பு:

கவி காளமேகப் புலவர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

இவர் கும்பகோணத்தில் பிராமணர் மரபில், கோயில் பரிசாரகரின் மகனாகப் பிறந்தவர்.

பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் வரதன் என்பது, இனிதான கவிதைகளை இயற்றுவதில் வல்லவரான அதிமதுரக்
கவிராயர் இயற்றிய பின்வரும் செய்யுள் மூலம் தெரிகிறது.


"வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்  
வீசு கவிகால மேகமே -பூசுரா."

பணிநாடல்:

வரதன் தன் இளமைப் பருவத்தில் தனக்கு ஏற்ற ஒரு பணியைத் தேடி கும்பகோணத்தை விட்டு ஸ்ரீரங்கத்தை(திருவரங்கம்) அடைந்து,
கோயில் மடப்பள்ளி அலுவல்களில் பரிசாரகர் பணியில் அமர்ந்தார்.

காளமேகம் சிறப்புப் பெயர் பெற்றது:

மோகனாங்கித் தொடர்பு:

திருவரங்கத்திற்கு அருகில் திருவானைக்கா எனும் திருத்தலம் உள்ளது.
சம்புகேசுவரப் பெருமான் வீற்றிருக்கும் சிவன் கோயில் அது.
இறைவன் முன்பாக ஆடிப்பாடித் தொண்டு செய்யும் தேவதாசியர் பலரில் மோகனாங்கி என்பவரும் ஓருவர்.
அவள் மீது வரதன் காதல் கொண்டான்.
வரதனோ வைணவப் பெருமாள் கோயில் பரிசாரகர், மோகனாங்கியோ சிவன் கோயில் தாசி.
இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், மோகனாங்கி மீது தீராக்காதல் வயத்தால் வரதன் சம்புகேசுவரர் கோயிலை நாடிச் சென்று சைவநெறியை தான் ஏற்பதாகத் தெரிவித்தான்.
அவருக்கு சிவ தீட்சை அளித்து அவரை சம்புகேசுவரர் கோயில் பரிசாரகர் ஆக நியமித்தனர்.

வரதர், திருக்கோயிலில் பரிசாரகர்(சமையலர்) பணியைச் சற்றும் குறைவின்றி கவனித்து வந்ததோடு சம்புகேசுவரரின் தேவியாகக்
கோயில் கொண்டிருக்கும் அம்மையின் திருமுன்பாக இரவு பகலாக நோன்பிருந்தும் வரலானார்.

தேவியின் அருள்:

ஓரு நாள், கோயில் பரிசாரகர் பணியை முடித்ததும், மோகனாங்கி அவளின் குடவரிசைப் பணியை முடித்து வருவாள் என்று
அவள் வந்ததும் இருவருமாகச் சேர்ந்து போகலாம் என்று வரதர் கோயிலில் காத்திருந்தார். வெகு நேரமாகியும் அவள்
வராததால் கோயிலிலேயே வரதர் உறங்கிப்போனார்.

கோயிலின் பெருங்கதவை மூடித் தாளிட்டுவிட்டனர்.
அன்றிரவில், அம்பிகை ஓரு சிறு பெண்ணாக வடிவெடுத்தாள். அவள் திருவாயில் தாம்பூலம் நிறைய இருந்தது. உறங்கிப் போன வரதர் முன் நடுச்சாம வேளையில்
தோன்றி, எழுப்பி “வாயைத் திற” என்று கூறி வாயிலிருந்த தாம்பூலச்சாற்றை அவன் வாயில் உமிழ்ந்தாள்.

அக்கணமே, பரிசாரகர் வரதன் கவிமழை பொழியலானான்.அன்று முதல் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் நால்வகைக் கவிகளை பாடலாயினார்.
அதனால் அவரை “கவி காளமேகம்” என்று அனைவரும் அழைக்கலாயினர்.

அம்பிகைக்கு நன்றி:

தமக்கு அருள் பாலித்த அம்பிகையின் கருணைக்கு நன்றியாக “திருவானைக்கா உலா” எனும் நூலை இயற்றினார்.

வசைப்பாட்டு:

“வசை பாடக் காளமேகம்” எனும் தொடர் இவர் வசைபாடுவதில் வல்லவர் என்பதைத் தெரிவிக்கிறது.
தெலுங்கு மொழிச் சிற்றரசன் திருமலைராயன் அரசவையில் தன்புலமையைக் காட்டி பரிசில் பெறக் காளமேகம் எண்ணி அரசவைக்குச் சென்றார்.

அவ்வமயம் அதிமதுரக் கவிராயரும், தண்டிகை என்னும் சிறப்பினைப் பெற்ற 64 புலவர்கள் புடை சூழ அங்குவந்தார்.
அரசவையில் இருந்த காவலன், அதிமதுரக் கவிராயரின் வருகையை வாழ்த்தொலி முழங்கி அறிவித்தான்.
அவையில் கூடியிருந்த அனைவரும் உடன் வாழ்த்தொலித்தனர். காளமேகத்தையும் வாழ்த் தொலிக்குமாறு காவலன் வற்புறுத்தினான்.
காளமேகமோ வாழ்த்தொலிக்காமல் பின்வரும் பாடலைப் பாடினார்.


*"அதிமதுரம் என்றே அகிலம் அறியத்  
துதி மதுரமாய் எடுத்துச் செல்லும் புதுமையென்ன  
காட்டுச் சரக்கு உலகில் காரமில்லாச் சரக்கு  
கூட்டுச் சரக்கு அதனைக் கூறு"*  

பாடலின் கருத்து:

அதிமதுரம் என்பது ஓரு காட்டுச் சரக்கு(நாட்டு மருந்துச் சரக்கு) அதனை ஏன் வாழ்த்த வேண்டும்? என்பதே இதன் பொருள்.

இந்த ஏளனமான பாடல் குறித்து காவலன் கவிராயரிடம் கூற, அவரோ மன்னனிடம் கூறிவிட்டார்.
காளமேகத்தை அரசவைக்குக் கொண்டுவர மன்னன் உத்திரவிட அவரும் அழைத்துவரப்பட்டார்.
அவையிலிருந்த தண்டிகைப் புலவர்களைப் பார்த்து நீவீர் யார்? என வினவ, அவர்கள்

“நாங்களெல்லாம் கவிராஜர்கள்” என்று கர்வம்படக் கூறினர். அவர்களின் கர்வத்தை அடக்க அவர்களைக் குரங்கிற்கு ஓப்பிட்டுப் பின்வரும் பாடலைப் பாடினார்.


*“வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு  
காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே சாலப்  
புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்  
கவிராயர் என்றிருந்தக் கால்”  

கவி என்றால் குரங்கு என்பது மற்றொரு பொருள். கவிராஜர் என்றால் நீங்கள் குரங்குகளோ?
குரங்குகள் என்றால் உங்களுடைய வால்கள் எங்கே? நீண்ட வயிறெங்கே?
முன்னங்கால்கள் எங்கே? உட்குழிந்திருக்கும் கண்கள் எங்கே?
நீங்கள் குரங்குகளுக்குத் தலைவர்கள் எனில் இவையெல்லாம் உங்களிடம் இருக்க வேண்டுமே!

என்று ஏளனமாக வசைபாடிய பாடல் இதுவாகும்.

யமகண்டம்:

வசைபாடிய காளமேகத்தின் செருக்கையடக்க மன்னன் திருமலைராயன் எண்ணினான்.
அதற்காக காளமேகத்திற்கும் அதிமதுரக் கவிராயருக்குமிடையே ஓரு போட்டியை நடத்த மன்னன் திட்டமிட்டான்.
தண்டிகைப் புலவர்களின் உதவி பெற்று அதிமதுரக் கவிராயர் இந்தப் போட்டியில் திண்ணமாக வெற்றி பெறுவார் என்று மன்னன் திடமாக நம்பினான்.

இந்த போட்டி பற்றிய உரையாடல் இங்கே:

என்னைப் போல் விரைந்து கவிபாடும் வல்லமை உம்மிடம் உண்டா?
அரிகண்டம் பாடி என்னை வெல்ல உன்னால் முடியுமா?
என்று காளமேகத்திடம் அகந்தையோடு கேட்டார் அதிமதுரக் கவிராயர்.

அரிகண்டம் பாடும் முறையைக் கூறு, அதன்பின் யான் இசைவேன் என்றார் காளமேகம்.
கழுத்தில் கூறிய கத்தியினை அணிந்து கொண்டு போட்டிக்குத் தயாராகவேண்டும்.
கேட்கும் குறிப்பை ஒட்டி உடனுக்குடன் கவிபாட வேண்டும். பாடும் கவியில் சொற்பிழை,
பொருட்பிழை, இலக்கணப்பிழை ஏற்படக் கூடாது.

அவ்வாறு பாடும் பாடல் பிழை பட்டால் கழுத்து வெட்டப்படும்.
பிழையின்றிக் கவிபாடி வென்றால் தக்க பாராட்டும், பரிசும் கிடைக்கும். சம்மதமா?

இதுவே அரிகண்டம் என்றார் கவிராயர்.

“அரி கண்டம் ஒரு பெரிதா என்ன? யாம் யமகண்டமே பாடி உம்மை வெல்வோம்!”
என்று காளமேகம் பதிலிறுத்தார்.

பாடுவதற்கரிய “யமகண்டம்” பாடுவதில் இவர் வல்லவர்.
நீளம், அகலம், ஆழம், வொவ்வொன்றும் 16
அடி அளவுகள் கொண்ட சதுரக் குழியில் பருத்த புளியங்கட்டைகள் நிரப்பப்பட்டு அதன் நடுவே
ஓரு எண்ணெய்க் கொப்பரையை வைத்து அதனுள் அரக்கு, மெழுகு, கங்குலியம் போன்றவை இடப்பட்டு இருக்கும்.
குழியின் நான்கு மூலைகளிலும் 16 அடி உயர இரும்புக் கம்பங்கள் நடப்பட்டிருக்கும்.

அதன் மேலாக நாற்புறமும் இரும்புச் சட்டமிட்டு அச்சட்டங்கள் நடுவிலே இரு குறுக்குச்சட்டங்கள் இடப்படும்.
குழியின் நடுவே மேற்பகுதியில் குறுக்குச் சட்டங்கள் சந்திக்கும் இடத்தில் உரி வொன்று இருக்கும்.
கட்டைக்கு நெருப்பிட்டு கொப்பரை கொதிக்கும். போட்டியிடுபவர் அந்த உரியில் அமர வேண்டும். போட்டியிடுபவர் அந்த உரியில் அமர வேண்டும்.
எட்டு எக்குக் கத்திகள் ஒரு சங்கிலியில் கோர்க்கப்பட்டு கழுத்தில் நான்கும் இடையில் நான்குமாகக் கட்டிக்கொள்ள வேண்டும்.
குழியின் நான்கு மூலைகளில் நான்கு யானைகள் இருக்கும்.
கத்திகள் கோர்க்கப்பட்டச் சங்கிலி அந்நான்கு யானைகளின் துதிக்கையில் சேர்க்கப் பட்டிருக்கும்.
கொடுக்கப்படும் குறிப்புகளுக் கேற்ப, அரை நொடியில் செய்யுளைச் சொல்ல வேண்டும்.
செய்யுள் பிழைபட்டால் சங்கிலிகள் இழுக்கப்பட்டு கழுத்து மற்றும் உடல் துண்டிக்கப்பட்டு கொப்பரையில் வீழ்த்தப்படும்.
இதுவே யமகண்டம் பாடுவதாகும். இவ் யமகண்டப் பாடலைப் பாடுவதில் இவர் வல்லவர்.

சிலேடைப்பாடல்:

சிலேடைப் பாடல்கள் பாடுவதிலும் இவர் வல்லவர்.


பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும்  
பெரியவிடமே சேரும்பித்தர் முடியேறும்  
அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரி குணமாம்  
தம்பொழியுஞ் சோலைத் திருமலைராயன் பரையில்  
பாம்பும் எலுமிச்சம் பழம் {6}

பாம்பு:
பெரிய அளவில் விடம்(நஞ்சு) சேர்ந்திருக்கும்.
பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும்.
அரி(காற்று) உண்ணும். அதனால்(தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும்.
எரிச்சல்(சினம்) குணம் உடையது.
எலுமிச்சம் பழம்:
பெரியவர்களிடம் செல்லும் போது, மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப்
பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப்பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும்.
அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும்.
உப்பிட்டு ஊறும். உப்பு மேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.

கலைமகள் அருள்:

மன்னன் திருமலைராயன், தன் அவைக்கு வந்த கவிகாளமேகத்துக்கு உரிய இருக்கை தந்து உபசரிக்காமல் அலட்சியப் படுத்தினான்.
கலைமகளின் அருளால் காளமேகத்தின் இருக்கை சிம்மாசனமாக வளர்ந்து அரசனுக்கு நிகராக இடங்கொடுத்தது.
கலைமகளின் இவ்வருளை நினைந்து பாடிய செய்யுள்:


"வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு    
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை   
அரியாசனத்தில் அரசரோ டென்னைச்  
சரியாசனம் வைத்த தாய்."

பதவுரை:

வெள்ளைக் கலையுடுத்து - வெண்ணிற ஆடையை உடுத்தவளாக,
வெள்ளைப் பணி பூண்டு - வெண்ணிற அணிகலன்களை உடுத்தவளாக,
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் - வெந்தாமரை மலரில் வீற்றிருக்கும் கலைமகளே,
வெள்ளைஅரியாசனத்தில் - மாசற்ற சிம்மாசனத்தில்,
அரசரோ டென்னை - அரசன் திருமலைராயனுடன் என்னை,
சரியாசனம் வைத்த தாய் -சிம்மாசனத்தில் வீற்றிருக்கச் செய்த தாயே உன் மலரடியைப் போற்றுகின்றேன்.

கலைமகளின் அருள் காளமேகத்திற்கு இருக்கிறதென்ற உண்மையை அரசனும் அவையோரும் அறிய புலப்படுத்தப்பட்டது.

எல்லோருக்கும் ஆறு தலை:

யாவர்க்கும் ஆறு தலை என்று இவர் பாடிய பாடல்


சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை  
ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப்  
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தா நின்பாதம்  
பிடித்தோர்க்கு மாறுதலை பார்.   

சங்கரர்க்கு மாறுதலை - சங்கரன் தலையில் கங்கை ஆறு உள்ளது,
சண்முகர்க்கு மாறுதலை - சண்முகனுக்கு ஆறுதலைகள் உள்ளன,
ஐங்கரர்க்கு மாறுதலை யானதே - ஐந்து கை கொண்ட பிள்ளையார்க்கு மாறுபட்ட யானைத் தலை உள்ளது,
சங்கைப் பிடித்தோர்க்கு மாறுதலை - சங்கைப் பிடித்த திருமாலுக்கும் பத்துப் பிறவிகளிலும் மாறுபட்ட தலை இருந்தது,
பித்தா - சிவனே,
நின்பாதம் பிடித்தோர்க்கு மாறுதலை பார் - உன் திருவடிகளைப் பற்றிய அடியவர்களுக்கும் ஆறுதல் இருப்பதை நீயே பார்.

ஆசுகவி:

ஆசுகவி எனப்படுவோர், கொடுத்த பொருளில் அடுத்த பொழுதிலேயே கவிதைபாடும் திறன் பெற்றவர் என்று திவாகர நிகண்டு கூறுகிறது.


கொடுத்த பொருளில் தொடுத்த இன்பத்தில்  
அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி(திவாகர நிகண்டு பகுதி 12).  

நினைத்தவுடன் கவிபாடும் புலமை
பெற்றவர் காளமேகம். அதனால் இவரை ஆசுகவி என்று கூறுவர். ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்,
உங்களை பெரிய புலவர் என்கிறார்களே உங்களால் முருகனைப் புகழ்ந்து பாடமுடியுமா?

அப்பாடல் செருப்பில் தொடங்கி விளக்குமாரில் முடிய வேண்டும் என்றார் குசும்பாக.

அழகனை இவ்வாறாக பாடுவது தகுமோ?
தகும் என்ற முறையில் முடியுமெனக் கூறினார் காளமேகம்.

அவர்தான் ஆசுகவி ஆயிற்றே. அவர் பாடிய பாடல் இதோ:


*"செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்  
பொருப்புக்கு நாயகனைப் புல்ல – மருப்புக்குத்  
தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்  
வண்டே விளக்கு மாறே!"*  

பதவுரை:

செரு = போர்க்களம்;
புக்கு = புகுந்து;
சென்று உழக்கும் = வீர்ர்களைக் கொன்று குவித்து வெற்றி ஈட்டும்;
பொருப்புக்கு நாயகனை = மலைகள் சூழ்ந்த குறிஞ்சி நிலத்தின் தலைவனான;
வேலன் = மன்னவனாகிய வேலன்;
புல்ல = ஆரத் தழுவிக் கொள்ள;
மரு = மணம் ; புக்கு = புகுந்து;
தண் தேன் = குளிர்ச்சியான தேன்;
பொழிந்த = பொழிகின்ற;
திருத் தாமரை மேல் வீற்றிருக்கும் = அழகிய தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும்;
வண்டே = அறுகாற் பறவை எனப்படும் வண்டே;
விளக்கு = விளக்கிச் சொல்வாயாக!

பாடலின்கருத்து:

போர்க்களம் புகுந்து வீரர்களைச் சிதறடித்துப் போர் புரியும் குறிஞ்சி நிலத் தலைவனான வேலனை, நான் நேரில்
கண்டு பாராட்டிக் கட்டித் தழுவும் வகைபற்றி, தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் வண்டே எனக்கு விளக்கிக் கூறுவாயாக.

மற்றொரு புலவர் காளமேகத்திடம், “அப்பா” என்று தொடங்கி “யார்க்கும் இனிது” என்று முடித்து ஒரு வெண்பா பாடுக என்றார்.

காளமேகம் பாடிய பாடல் இது.


*"அப்பா குமரக்கோட்டக் கீரை செவ்விலிமேட்  
டுப்பாகற்காய் பருத்திக் குளநீர் -செப்புவா  
சார் காற்றுங் கம்பந்தடியிற்ற வங்கருமா  
றிப்பாய்ச்சல் யார்க்கும் இனிது"*

பதவுரை:

அப்பா - அப்பனே
குமரக்கோட்டக் கீரை - குமரகோட்டத்தின் அருகில் பயிரிடப்படும் கீரையும்,
செவ்விலிமேட்டுப் பாகற்காய் - செவிலிமேடு என்னுமிடத்தில் பயிரிடப்படும் பாகற்காயும்,
பருத்திக்குளநீர் - திருப்பருத்திக்குன்றத்தேயுள்ள தண்ணீரும்,
செப்புவாசற் காற்றும் - காஞ்சிபுரம் கோயிலின் தெற்கு கோபுரவாசலிலே வருகின்ற காற்றும்,
கம்பந்தடியில் தவம் - திருவேகம்பர் வீற்றிருக்கும் மாமரத்தடியில் தவம் செய்தலும்,
கருமாறிப் பாய்ச்சல் - கருமாரி என்பதன் நீரைப் பாய்ச்சலும்,
யார்க்கும் இனிது - எல்லோருக்கும் இனியதாக இருப்பவையாம்.

வர்கப் பாடல்:

வர்கப் பாடல் பாடுவதிலும் இவர் வல்லவர்.
வர்கம் என்றால் ஒத்த வார்த்தைகளின் கூட்டம்.
தகர வரிசையில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு இவர் பாடிய பாடல் சிந்தை, செவிக்கு விருந்தாக அமைந்துள்ளது.


*"தாதிதூ தேதீது தத்தைதூ தோதாது  
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த  
துத்திதத் தாதே துதித்துத்தேத் தொத்தீது  
தித்தித்த தோதித் திதி."*  

இது, தலைவியானவள் தலைவனை நினைந்து உருகும் நெஞ்சுக்குக் கூறியது.
தலைவியின் காதல் உள்ளத்தைத் தலைவனிடம் கூற வழியில்லை.

பணிப் பெண்ணின் தூது தீது தருவது.
கிள்ளையைத்(கிளியைத்) தூதுவிடலாம் என்றால் அதனால் பேச இயலாது.
தோழியைத் தூது அனுப்பலாம் என்றால் அவளோ நாளை நாளை என்று நாளைப் போக்குவாள்.
இந்தநிலையில் நெஞ்சமே நீயே தலைவனின் பெயரைக்கூறி என்னைக் காப்பாற்ற வேண்டுமென்ற பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது.

மேலமைந்த பாடலைப் பின்வருமாறு பிரித்துப் படித்தால் எளிதில் பொருள் விளங்கும்.


*தாதி தூதோ தீது, தத்தை தூது ஓதாது  
தாதிதூது ஒத்தித்த தூதது - தாதுஒத்த  
துத்தி தத்தாதே துதித்ததே தொத்தீது  
தித்தது ஓதித் திதி.*  

பதவுரை:

பணிப் பெண்ணின் தூது தீது தருவது.
கிளி தூது செல்லாது. தூது உரைக்கும் தோழியின் தூதும் காலம் கடத்தும்.
மகரந்தத் தூள் போன்ற அழகிய புள்ளிகள்(தேமல்) என் மீது மிகுதியாகாது.
கடவுளைத் தொழுது தொடர்வது தீமையைப் பயக்கும்.
(ஆகவே) இனிமையான என் தலைவர் பெயரைக் கூறி(நெஞ்சே என்னை) காப்பாற்றுவாயாக.

நகைச்சுவை மிளிரப் பாடப்பட்டப் பாடல் இது.

முடிவுரை:

நகைச்சுவை மிளிரப் பாடுவதில் காளமேகத்திற்கு இணை யாருமில்லை எனக் கூறலாம்.
இவர் இயற்றிய வேறு நூல்கள் திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை ஆகும்.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்