சங்ககாலப் புலவர்களின் பாடல்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய தொகை நூல்களில் காண்கிறோம்.
அதுபோலவே பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல புலவர்களின் பாடல் சிறப்பினைத்
தனிப்பாடல் திரட்டில் கண்டு இன்புறலாம். இத் திரட்டில் இரட்டைப் புலவர்களின் பாடல்களையும் காணலாம்.
பாடல்கள் அனைத்தும் சொற்சுவை மிக்கவை, எளிமை வாய்ந்தவை, இனிமை நிறைந்தவை.
இரட்டைப் புலவர்கள் அல்லது இரட்டையர்கள் எனப்படுவோர் கி.பி 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் ஆவர்.
சோழ நாட்டில் ஆலந்துறையில் செங்குந்தர் மரபில் அத்தை மகன் மாமன் மகனாகப் பிறந்தவர்கள்.
இதனைப் பின்வரும் பாடல் வரிகள் மூலம் அறியலாம்.
"அத்தை மகன்குரு டம்மான் மகன்முட மாகிக்கீழ்மேல்
ஒத்துறைந் தேகூறு பாடோ(டு) அணிகொள் உலப்பில்கவி
முத்தரில் ஓதியே கம்பர் உலாமுன் மொழிந்தவரும்
சித்தம் உவப்பத் திரிந்தோர் செங்குந்த சிலாக்கியரே"
அத்தை மகன் குருடன், மாமன் மகன் முடவன் ஆகிய இருவரும், குருடன் தன் தோளில் முடவனைத் தூக்கி நடக்க,
முடவன் குருடனை வழி நடத்த, இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து, ஒரு பாடலின் முன்பகுதியை முடவன் பாட,
பாடலின் பின்பகுதியைக் குருடன் முடித்துப் பாடுவது என்ற பாகுபாட்டுடன் பாடல்களைத் திருவேகம்பப் பெருமான்
மீது **“ஏகம்பர் நாதருலா”**வை இயற்றி அனைவரும் சிந்தை குளிர கவி வல்லவர்களாக உலவி வந்த இரட்டையர்கள்
செங்குந்தர்களுக்குள்ளே உயர்ந்தவராவர்.
இவர்கள் வரபதியாட்கொண்டார் எனும் சேர மன்னன் காலத்தில் வாழ்ந்தவர்கள்.
இவ் விருவருக்கும் பிறவியிலேய ஊனம் இருந்தாலும் அவர்கள் ஞானம் மிகுந்து ஞாயிறு(சூரியன்) போல பிரகாசித்து ஞாலத்தை(உலகை) வலம் வருவார்கள் என்று மனமுடைந்த பெற்றோரிடம் அவ் விரட்டையரைப் பற்றி பெரியோர்கள் வாழ்த்தினார்களாம்.
இதனாலேயே இரட்டையரில் முன்னவர்க்கு முதுசூரியன்(ஞாயிறு-சூரியன்) என்றும் பின்னவர்க்கு இளஞ்சூரியன் என்றும்
பெயரிட்டு அழைக்கலாயினர்.
சிறுவயதிலேயே இருவரும் தமிழின்பால் பற்று கொண்டு களங்கமறக் கற்றுச் சிறந்தனர். தெய்வத் திருவருளால் கசடறக் கவி
பாடுவதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். சிலேடைப் பாடல்கள் பாடுவதிலும் அம்மானைப் பாடல்கள் பாடுவதிலும் கலம்பகம்
பாடுவதிலும் திறமை உடையவர்களாக விளங்கினர்.
“கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்” எனும் தொடர் வாயிலாக கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் என்பதை அறியலாம்.
கலம்பகம் என்பது தமிழ் இலக்கண வகைப்படி கதம்ப மலர் மாலை போன்று பதினெட்டு உறுப்புகள் அமையப் பல்வகைப் பா
விகற்பங்களைப் பாடப் பெறுவது ஆகும்.
சிதம்பரம் நடராசர் மீது அதீதப் பற்று கொண்டு பாடிய தில்லைக் கலம்பகத்தில் வரும் ஒரு பாடலில் “இரண்டு” எனும் சொல்
தொடர்ந்து வருவது போல் பாடிய பாடல் வருமாறு:
"காதில் இரண்டு பேர், கண்டோர் இரண்டு பேர்,
ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்,
பேதைமுலை உண்ணார் இரண்டு பேர்,
ஓங்கு புலியூரர்க்குபெண்ணான பேர் இரண்டு பேர்"
காதில் இரண்டு பேர்-கம்பளர் மற்றும் அசுவதரர் எனும் இரு நாகர்கள் சரஸ்வதி அருளால் இசை ஞானம் பெற்றவர்கள்.
தங்களின் இசை வல்லமையை சிவபிரானிடம் மட்டுமே சமர்ப்பணம் செய்யத் தவம் இருந்தனர். தவத்தை மெச்சி சிவபெருமான்
அவர்களைத் தன் இரு காதுகளில் தோடாக அணிந்து கொண்டார்.
கண்டோர் இரண்டு பேர்-தில்லை நடராசப் பெருமானின் தாண்டவத்தைக் கண்டு பேறு பெற்றவர்கள் பதஞ்சலி மற்றும்
வியாக்ரபாத முனிவர்கள் ஆகிய இருவர்.
ஏதிலராய்க் காணோர் இரண்டு பேர்-சிவபெருமானின் அடி முடி காண இயலாமல் திகைத்த பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய இருவர்.
பேதைமுலை உண்ணார் இரண்டு பேர்-பார்வதி தேவிக்கு மகனாகப் பிறந்த விநாயகர் மற்றும் பார்வதி தேவியின் மகனாகப்
பாவிக்கப்பட்டு ஞானப்பால் ஊட்டப்பட்ட திருஞானசம்பந்தர் ஆகிய இருவர்.
ஓங்கு புலியூரர்க்குப் பெண்ணான பேர் இரண்டு பேர்-சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையும், தன் உடலில் சரிபாதியாகக்
கொண்ட பார்வதி தேவியும் ஆகிய இருவர்.(.புலியூர்- தில்லை , புலியூரர்- தில்லையம்பெருமான். )
சிலேடை என்பது, பாடும் பாடல், இரு பொருள் தருமாறு பாடுவது.
பாடலின் முன்னிரண்டு அடிகளை ஒருவர் எடுத்துப் பாட, பின்னிரண்டு அடிகளை மற்றவர் முடித்துப் பாடுவது இவர்கள் பாடும் சிலேடைப் பாட்டின்
முறையாகும். இவர்களின் பாடல்களில் சைவப்பற்று ஓங்கியிருந்தது. சிவத் தலங்களுக்கு யாத்திரைச் சென்று சிவபெருமான்
மீது பல பாடல்களைப் பாடினர். வரபதியாட்கொண்ட சேர மன்னன் மீதும் பல பிரபுக்கள் மீதும் பாடல்களைப் பாடி
பாராட்டுகளும் பரிசில்களும் பெற்றுள்ளனர்.
"அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ -இப்புவியில்
இக்கலிங்கம் போனாலென் னேகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் தானிருக்கச் சொல்".
மதுரைச் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் தரிசிக்கவேண்டி வைகை ஆற்றில் குளித்துவர இரட்டையர்கள் சென்றனர்.
கண்பார்வை இல்லாதவர் ஆடைகளைத் துவைத்துக் கொண்டிருந்தபோது ஆற்றுநீர் ஆடைகளை அடித்துச் சென்றது.
காலில்லாதவர் அவற்றைத் தாவிப் பிடிக்க முடியாமல் மேற்காண் பாடலின் முதலிரண்டு அடிகளைப் பாடினார்.
அப்பிலே-தண்ணீரிலே,
தோய்த்திட்டு-முழுதுமாக நனைத்து,
அடுத்தடுத்து-மீண்டும் மீண்டும்,
நாமதனைத் தப்பினால்-நாம் அதனை அடித்துத் துவைத்தால்,
நம்மை அது தப்பாதோ-நம்மை விட்டு அது விலகிச் செல்லாதோ.
இதற்கு பதிலுரையாக, ஆடைகளைத் துவைத்துக் கொண்டிருந்த கண்பார்வை இல்லாதவர் மேற்காண் பாடலின் பின்னிரண்டு
அடிகளைப் பாடி முடித்தார்.
இக்கலிங்கம்-இந்த ஆடையானது,
போனாலென்-நம்மை விட்டுப் போனாலென்ன,
ஏகலிங்க மாமதுரை-லிங்க சொரூபமாக மதுரையில் வீற்றிருக்கும்,
சொக்கலிங்கம் தானிருக்கச் சொல்-சொக்கநாதர் துணையாக உள்ளார்.
மூன்று பெண்கள் கூடி விளையாடுவது. அம்மானைக் காய்களை(மரத்தாலான சிறிய பந்து போன்ற உருண்டைகள்) மேலே
எறிந்து கீழே விழுங்கால் பிடிப்பதாக அமைந்த பாட்டு. இருபது முதல் இருபத்தைந்து வயதுடைய அரிவையர்கள் விளையாடுவது.
மூவரில் ஒருவர் தெய்வத்தைப் பற்றிப் புகழ்ந்து கூறுவது. அடுத்தப் பெண் கேள்வி கேட்பது. மூன்றாவது பெண் பதில் சொல்வது.
இவ் விளையாட்டின்போது அம்மானைக் காய்கள் கீழே விழவும் கூடாது, செய்யுள் நடை மாறவும் கூடாது, தகுந்த பதிலும்
அமைய வேண்டும்.
இம் மூவகைச் செயலும் ஒரே நேரத்தில் நிகழ்தல் வேண்டும். கடினமான, புத்திக் கூர்மையான விளையாட்டு இது.
சிலேடை நயத்துடன் இரு பொருள் தருமாறு பாடியது:
"தென்புலியூர் அம்பலவர் தில்லைச் சிதம்பரத்தே
வெம்புலியொன் றெந்நாளும் மேவுகான் அம்மானை
வெம்புலியொன் றெந்நாளும் மேவுமே ஆமாகில்
அம்பலத்தைவிட்டே அகலாதோ அம்மானை
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை"
முன்னிரண்டு அடிகளை முதற் பெண்ணும், அடுத்த இரண்டடிகளை இரண்டாவது பெண்ணும், ஈற்றடியை மூன்றாவது பெண்ணும்
பாடியுள்ளவாறு அமைந்துள்ள பாடல்.
முதற் பெண்: தென்புலியூர் எனும் தில்லையில் புலி ஒன்று காக்கின்றது.
இரண்டாம் பெண்: அவ்விடத்தே யுள்ள அப்புலி அவ்விடத்தை விட்டு எப்போது அகலும்.
மூன்றாம் பெண்: ஆடு இருக்கும்போது புலி விலகுமா.
முதற் பெண்: தில்லை அம்பலவாணர் வீற்றிருக்கும் சிதம்பரத்தில்(தென்புலியூர்) முனிவர் வியாக்ரபாதர் எந்நாளும் மேவியுள்ளார்.
இரண்டாம் பெண்: அவர் தில்லையை விட்டு எப்போது விலகிச் செல்வார்.
மூன்றாம் பெண்: தில்லை நடராசப் பெருமானின் ஆட்டத்தில் நாட்டம் கொண்ட முனிவர்(வியாக்ரபாதர்) எந்நாளும் விலக மாட்டார்.
தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்கள் பலருள் இரட்டையர்களும் அடங்குவர்.
இரட்டையர்கள் பாடிய தில்லைக் கலம்பகம், திரு ஆமாத்தூர் கலம்பகம், மூவர் அம்மானைப் பாடல்கள்,
கச்சிக் கலம்பகம் மற்றும் கச்சி உலா முதலிய பிரபந்தங்கள் மற்றும் பல தனி நிலைச் செய்யுள்களைப் படித்து மகிழ்வோமாக.
வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்