திருமந்திரம் கூறும் ஏழு வித்யா தத்துவங்கள்

வழங்கியவர் தசா . 05 Sep 2021

(Thirumandhiram Koorum Ezhu Vidhya Thathuvangal)
(Tirumantiram kūṟum ēḻu vityā tattuvaṅkaḷ)

தகவல்களின் மூலம்:

1. திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு - டாக்டர் சுப. அண்ணாமலை  
2. உண்மை விளக்கம் - https://shaivam.org/   
3. https://thevaaram.org  

அணுகுமுறை:

எடுத்துக்காட்டாக ஒரு மரத்தின் வாழ்நாளை நாம் இங்கு விளக்க முயல்கிறோம்.

எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள் சரியான சூழ்நிலையில், அதாவது ஒரு விதைக்குத் தேவையான நிலம், காற்று, சூரிய ஒளி, மற்றும் நீர் அதற்குக் கிடைக்கும் சூழலில், அந்த விதையினுள்ளும் உள்ளப் பரம்பொருள் தூண்டப்பட்டு அந்த விதை மரமாக வளரத் தொடங்குகிறது.

மரத்தின் ஞானேந்திரியங்கள் - வேர், இலை, மற்றும் தண்டு ஐம்பூதங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதால், இவற்றைப் பொறிகளாகக்(ஞானேந்திரியங்களாகக்) கருதலாம்.

மரத்தின் தன்மாத்திரைகள் - வேரினால் உணரப்படும் நீரின் சுவை, மற்றும் நிலத்தின் நாற்றம்; தண்டு மற்றும் இலையினால் உணரப்படும் ஆகாயத்தின் ஒலி, காற்றின் ஊறு, மற்றும் சூரியனின் ஒளி இவைகளைப் புலன்களாகக்(தன்மாத்திரைகளாகக்) கருதலாம்.

மரத்தின் கன்மேந்திரியங்கள் - மரத்தின் மகரந்தச் சேர்க்கை மற்றும் மரத்தின் கழிவுகளான உதிர்ந்த இலைகள் மற்றும் கரியமில வாயு இவைகளை நாம் கன்மேந்திரியங்களாகக் கருதலாம்.

மரத்தின் அந்தக்கரணங்கள் - மரத்தின் மனம் தட்ப வெப்ப மாற்றங்களை பற்றி, அதன் புத்தி இது இன்ன தட்ப வெப்ப நிலை என்று அறிந்து அதாவது இது இலையுதிர்காலம் அல்லது வசந்தகாலம் என்று அறிகிறது. அதன் சித்தம் தொடர்ந்து சிந்தித்து அந்த தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி அமைக்கிறது அல்லது வினை புரியச் செய்கிறது, அதாவது தன் இலைகளை உதிர்க்கிறது அல்லது மலர்களை மலருகிறது.

மேலே கூறப்பட்ட அனைத்தும் 24 ஆன்மதத்துவங்களில் அடங்கும்.
இந்த 24 ஆன்மதத்துவங்களும் தூல உலகின் அங்கங்களாகும். இந்த தூலத் தத்துவங்களே அசுத்த மாயை அல்லது பிரகிருதி மாயை அல்லது மூலப்பகுதி(வித்யா தத்துவம்-1) என்று அழைக்கப்படுகிறது.

இந்த மரத்தின் வாழ்நாள் மற்றும் செயல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு(வித்யா தத்துவம்-2) உட்பட்டவை.

இந்த மரத்தினால் அனுபவிக்கப்படும் இன்ப துன்பங்கள் அனைத்தும் அதன் வினைப்பயனுக்கு/நியதிக்கு(வித்யா தத்துவம்-3) உட்பட்டது.

புருடன் ஆணவ மலத்தில் இருந்து விடுபடும்போது, அசுத்த மாயையின் உண்மையை அறியும் போது தூய அறிவு/ஞானம் பிறப்பதற்கான முதல் நிலை என்ற கலை(வித்யா தத்துவம்-4) பிறக்கிறது. கலை ஞானத்தின் கிரியா சக்தியாகும். கலையிலிருந்து பின் அறிவு/ஞானம் என்னும் வித்தை(வித்யா தத்துவம்-5) பிறக்கும். இந்த அறிவிலிருந்து “ஆணவத்தில் இருந்து விடுபட்ட புருடனின்” / ஆன்மாவின் அராகம்(வித்யா தத்துவம்-6) என்ற இச்சை பிறக்கும்.

இந்த 24 ஆன்மதத்துவங்களில் கட்டுண்டுள்ள/இயக்குகின்ற மற்றும் மேலே கூறப்பட்ட ஐந்து ஆற்றல்களை(காலம், நியதி, கலை, வித்தை, அராகம்) ஆளும் ஆன்மாவே புருடன்(வித்யா தத்துவம்-7) என்று அழைக்கப்படுகிறது.

கலை - ஆணவ மலத்தை விலக்கி கிரியா/செயல் திறன் சக்தியை தூண்டும்.
வித்தை - ஆணவ மலத்தை விலக்கி ஞான/அறிதல் சக்தியை தூண்டும்.
அராகம் - ஆணவ மலத்தை விலக்கி இச்சா/விழைதல் சக்தியை தூண்டும்.

ஐந்து சிவதத்துவங்கள் பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.

ஐம்பூதங்கள், தன்மாத்திரைகள் & ஞானேந்திரியம் பற்றி திருமந்திரம் கூறும் கோட்பாடுகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

தத்துவ தாத்துவிகங்கள் பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.

தத்துவங்களுக்கு அப்பால்:

இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர்,
வந்தன சூக்கம் உடலன்று மான் - அது 
தந்திடும் ஐவிதத்து அற்றற் புருடனும்
முந்துஉளம் மன்னும் ஆறாறு முடிவிலே.
	- 2059 - கூடா ஒழுக்கம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
    - எட்டாம் தந்திரம்

முந்துஉளம் - உடலுக்கு முன்பே உள்ள ஆன்மா.

இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர், வந்தன சூக்கம் உடலன்று - ஆன்மா என்பது ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், அந்தக்கரணங்கள், மற்றும் பிராணன் வழி வந்த சூக்கும உடலன்று.

மான் - அது தந்திடும் ஐவிதத்து அற்றற் புருடனும்(அன்று) - ஆன்மா என்பது மாயை தந்திடும் ஐந்து ஆற்றல்களான காலம், நியதி, காலை, வித்தை, மற்றும் அராகம் இவைகளை ஆளும் புருடனும் அன்று.

ஆறாறு முடிவிலே மன்னும் - முப்பத்தாறு தத்துவங்களை விளக்கி நிற்கும் போது ஆன்மா தன்னைத் தானே உணரும்.

சுத்த நனவாதியில் தொழிற்படும் தத்துவங்கள்:

தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவ
ஈசன்நல் வித்தை - இராகம் கலை காலம்
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மா - ஈ ராறே. 
    - 2165 - சுத்த நனவாதி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
    - எட்டாம் தந்திரம்

சுத்த நனவாதி - அவத்தை பேதம் விழிப்பு/நனவாதி(சாக்கிரம்), கனவு(சொப்பனம்), உறக்கம்(சுழுத்தி), பேருறக்கம்(துரியம்), கடந்த நிலை(துரியதீதம்) ஐந்து நிலைகளை கொண்டது. நனவாதி நிலையின் சூக்கும அறிவே சுத்த நனவாதி.

தேசு திகழ்சிவம் சத்தி சதாசிவம் ஈசன்நல் வித்தை - சிவ தத்துவங்கள் சிவம், சக்தி, சதாசிவம், ஈசன், மற்றும் சுத்த வித்தை என்ற ஐந்தும் ஆகும்.

இராகம் கலை காலம் மாசகல் வித்தை நியதி மகாமாயை ஆசில் புருடாதி - வித்தியா தத்துவங்கள் காலை, நியதி, காலம், வித்தை, அராகம், புருடன், மற்றும் அசுத்த மாயை என்ற ஏழும் ஆகும்.

ஆன்மா - ஈ ராறே - இந்த பன்னிரண்டு தத்துவங்களும் ஆன்மாவில் சுத்த நனவாதியில் தொழிற்படுவனவாகும்.

உபசாந்த நிலையில் தத்துவங்கள் ஒடுங்கும் இடம்:

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்றறப்
பாரண வும்உப சாந்தப் பரிசிதே.    
    - 2478 - உபசாந்தம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
    - எட்டாம் தந்திரம்

உபசாந்தம் - உபசாந்தம் என்பது முப்பாழ் வகைகளுள் ஒன்று. முப்பத்தாறு தத்துவங்களும் மற்றும் அதனால் ஏற்படும் வாசனைகளும்(impressions) ஆன்மாவினின்று வேறு என்று விலகுதல் முப்பாழ் என்று அழைக்கப்படும். முப்பாழ் என்பது மாயப்பாழ், போதப்பாழ், மற்றும் உபசாந்தம் என்று மூன்று வகைப்படும்.

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் - பூதங்கள், தன்மாத்திரைகள், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், அந்தக்கரணங்கள், பிராணன், மற்றும் அசுத்த மாயை இவை ஏழும் காரிய தத்துவங்கள் ஆகும். இவை ஏழும் அசுத்த மாயையில் அடங்கும்.

காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி - வித்தியா தத்துவங்கள் ஏழும் காரிய தத்துவங்கள் ஆகும். இவை ஏழும் அசுத்த மாயையில் அடங்கி, சுத்த மாயையில் நிற்கும்.

காரிய காரண வாதனைப் பற்றறப் பாரண வும்உப சாந்தப் பரிசிதே - காரிய காரண தத்துவங்களால் ஏற்பட்ட வாசனைகள்(impressions) நீங்கும் போது உபசாந்த நிலை வரும்.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்