ஏலாதி இயம்பும் அறம்

வழங்கியவர் கி.சம்பத், காஞ்சிபுரம் . 10 Aug 2021

(Elaadhi)
(Ēlāti)

முன்னுரை:

சங்க இலக்கியங்கள் யாவும் பதினெண் மேற்கணக்கு மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களென வகைப் படுத்தப்பட்டுள்ளன.
எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனப்படும்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாவன:

"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்	
இன்னிலைசொல் கஞ்சியுட னேலாதி  யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு."

அதாவது பின்வரும் 18 நூல்களையும் கொண்ட தொகுதியே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாகும்.

1)நாலடியார் 2)நான்மணிக்கடிகை
3)இனியவை நாற்பது 4)இன்னா நாற்பது
5)கார் நாற்பது 6)களவழி நாற்பது
7)ஐந்திணை ஐம்பது 8)ஐந்திணை எழுபது
9)திணைமொழி ஐம்பது 10)திணைமாலை நூற்றைம்பது
11)திருக்குறள் (முப்பால்) 12)திரிகடுகம்
13)ஆசாரக்கோவை 14)பழமொழி
15)சிறுபஞ்சமூலம் 16)முதுமொழிக்காஞ்சி
17)ஏலாதி 18)கைந்நிலை

கீழ்க்கணக்கு நூலியல்பு:

அறம் பொருள் இன்பமெனும் முப்பொருளையும் நான்கடிகளுக்கு மிகாமல் குறைந்த அடிகளில் உரைப்பது கீழ்க்கணக்கு நூல்களியல்பாகும் என்பதைப் பின்வரும் பாட்டின்கண் அறியலாம்.

"அடிநிமிர் பில்லா செய்யுட் டொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வகைத்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்."
    -பன்னிரு பாட்டியல்

ஏலாதி – நூற்சிறப்பு:

சங்கம் மருவிய காலத்து தொகைநூலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஏலாதி.

பாயிரம், சிறப்புப்பாயிரம் உள்ளிட்ட 82 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல்.

மிகச் சிறந்த நீதிநூல்களுள் ஒன்று.

ஏலம் + ஆதி என்பதன் கூட்டுச் சொல்லே ஏலாதி ஆகும்.

ஏலம் முதலான அறுவகைப் பொருட்களைச் (ஏலம், இலவங்கம்,சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி மற்றும் சுக்கு) சேர்த்துச் செய்த மருந்திற்கு ஏலாதி என்று பெயர்.

இது ஏலாதிச் சூரணம் என்றும் சொல்லப்படுகிறது. இம்மருந்தானது உடல் நோயைப் போக்க வல்லதுடன் உடலிற்கு வலிமையையும் வனப்பையும் தர வல்லதாகும்.

அதுபோன்றே, ஏலாதியின் நூற்பாக்கள் ஒவ்வொன்றும் ஆறு நற்கருத்துக்களைக் கொண்டு மக்கள் நல்வாழ்விற்கும்,ஒழுக்கத்திற்கும் இன்றியமையாத அறக் கருத்துக்களை இயம்புகிறது.

ஏலாதி சிறந்ததொரு நீதி நூலுமாகும்.

நூலாசிரியர்:

இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார். இவரைப் பற்றிய விரிவான செய்திகள் கிடைக்கப் பெறவில்லை.
என்றாலும்

"மாக்காயனார் மாணாக்கர் கணிமேதையார்"

என்ற குறிப்பிலிருந்து இவர் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பது அறியமுடிகிறது.

சிறுபஞ்சநூலின் சிறப்புப் பாயிரத்தில்

"மல்லிவர் தோண் மாக்காயன் மாணாக்கன் ......காரியாசான்"

என்று பாடப் பெற்றுள்ளமையால் இந் நூலாசிரியரான காரியாசானும் மாக்காயன் மாணாக்கன் என அறியமுடிகிறது.

ஆக, ஏலாதி ஆசிரியரும் சிறுபஞ்சமூல ஆசிரியரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் என இதன் மூலம் அறியமுடிகிறது.
கணிமேதாவியார் என்பதால் இவர் கணிமேதை என்றும் இதனால் சோதிட நூற்புலமை மிக்கவர் என்றும் சொல்வாருமுண்டு.

இந் நூலினுள் சமண சமய பஞ்சசீல (கொலை, களவு, பொய், காமம், மற்றும் கள்) சிறப்பு அறங்கள் பற்றி கூறப் பட்டுள்ளதால் இப்புலவர் சமண சமயத்தவர் எனச் சொல்வாருமுண்டு.

நான்கு வரிகள் கொண்ட ஒவ்வொரு பாடலிலும் ஆறு சீரிய கருத்துக்களைச் சுவையாக ஆசிரியர் இயம்பியுள்ளார்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மற்றொன்றான திணைமாலை நூற்றைம்பதும் இவரால் இயற்றப் பட்டதேயாம்.

ஏலாதி இயம்பும் அறம்:

இந்நூல் எண்பது வெண்பாக்களைக் கொண்ட அறநூல். இவற்றுள் சில அறப்பாக்களில் சொல்லப்பட்டுள்ள நீதிக் கருத்துக்களை மட்டும் இங்கே காணலாம் .

நற்பண்புகள் ஆறு - யாரிடம் காணப்படும்?

"சென்ற புகழ்செல்வம் மீக்கூற்றம் சேவகம் 
நின்ற நிலை கல்வி வள்ளன்மை -என்றும் 
வழிவந்தார் பூங்கோதாய் ஆறும் மறையின் 
வழிவந்தார் கண்ணே வனப்பு"   
        (நூலின் முதற் பாடல் )

பதவுரை:

பூங்கோதாய் -பூக்கள் நிறைய அணிந்த கூந்தலையுடைய பெண்ணே.
சென்ற புகழ் -திசையெங்கும் பரவிய புகழ். (1)
செல்வம் - செல்வம். (2)
மீக்கூற்றம் -மேன்மையாகக் கொள்ளும் சொல் (3)
சேவகம் நின்ற நிலை - வீரத்தில் அசையாது நின்ற நிலை (4)
கல்வி –கல்வி (5)
வள்ளன்மை – ஈகைத்தன்மை (6)
ஆறும் - ஆகிய ஆறு நற்பண்புகளும்
மறையின் வழிவந்தார் கண்ணே -உயர் குடியின் வழிப் பிறந்து திருநான்மறை வழியில் ஒழுகுபவரிடத்தில்
என்றும் வனப்பு - எந்நாளும் அழகானவாம்

பொழிப்புரை:

பூக்கள் நிறைய அணியப்பெற்ற கூந்தலையுடைய பெண்ணே, எண்திசை யெங்கும் பரவிய புகழ், செல்வம், மேன்மையாகக் கொள்ளும் சொல், வீரத்தில் அசையாது நின்ற நிலை, கல்வி மற்றும் ஈகைத்தன்மை ஆகிய ஆறு நற்பண்புகளும் உயர்ந்த குடியில் பிறந்து வேதங்கள் சொல்கின்ற நெறியில் நின்று நடக்கின்றவர்களிடம் காணப்படும்.

சான்றோர்க்குரிய பண்புகள் ஏழு:

கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்மனைமேல்
செல்லான் சிறியா ரினஞ்சேரான் - சொல்லும்  
மறையிற் செவியிலன் றீச்சொற்கண் மூங்கை  
இறையிற் பெரியாற்கிவை.
        (நூலின் 19 -ஆம் பாடல்)                          

பதவுரை:

கொல்லான் - எவ்வுயிரையும் கொல்லாமை ,(1)
கொலைபுரியான் - பிறர் கொலை செய்வதை விரும்பாமை (2)
பொய்யான் - பொய் சொல்லாமை,(3)
பிறர் மனைமேல் செல்லான் - பிறர்க்குரிய மனைவியை விரும்பாமை, (4)
சிறியார் இனம் சேரான் - கீழ்மக்களோடு கூடாமை (5)
சொல்லும் மறையில் செவி இலன் – மறைவாய் பிறர் பேசுகின்ற மறை பொருள்களைக் கேட்க விரும்பாமை,(6)
தீச்சொற்கள் மூங்கை - தீய சொற்களைப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது ஊமையாயிருப்பது (7)
இவை இறையில் பெரியாற்கு - ஆகிய இவ் வேழு வியல்புகள் சான்றோர்களுக்குரிய பண்புகளாம்.

பொழிப்புரை:

சான்றோர்களுக்குரிய ஏழு நற்பண்புகளாவன:

(1 )பிற உயிர்களைக் கொல்லாமை .(2) பிறர் கொலை செய்வதை விரும்பாமை . (3) பொய் சொல்லாமை . (4) பிறர் மனைவியை விரும்பாமை . (5) கீழ் மக்களோடு சேராமை . (6) பிறர் பேசுகின்ற மறை பொருள்களைக் கேட்க விரும்பாமை . (7) தீய

சொற்களைப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது ஊமையாக இருத்தல் ஆகிய இவ்வேழுமாம்.

தேவர்களால் விரும்பப்படுபவர்கள் யார்?:

காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்
பாலில்லார் பற்றிய நூலில்லார் - சாலவும்
ஆழப் படுமூ ணமைத்தா ரிமையவரால்
வீழப் படுவார் விரைந்து.          
        (நூலின் 36 ஆம் பாடல்)

பதவுரை:

கால் இல்லார் - காலில்லாத நொண்டிகளுக்கும்,(1)
கண் இல்லார் - கண்ணில்லாத குருடர்களுக்கும், (2)
நா இல்லார் - வாய் பேசமுடியாத ஊமைகளுக்கும், (3)
யாரையும் பால் இல்லார் - தனக்குத் துணையாக எவருமில்லாத அனாதைகளுக்கும்,(4)
பற்றிய நுல் இல்லார் - சிறந்த நூலறிவு இல்லாதவர்கட்கும், (5)
ஆழப்படும் ஊண் அமைத்தார் - உண்டபின் வயிற்றில் தங்குதற்குரிய உணவைப் படைத்தவர்,
இமையவரால் சாலவும் - தேவர்களால் மிகவும்,
விரைந்து வீழப்படுவார் - விரைவாக விரும்பப்படுவார்.

பொழிப்புரை:

காலில்லா நொண்டிகளுக்கும்கண்ணில்லாத குருடர்களும், வாய்பேசமுடியாத ஊமைகளுக்கும், தனக்குத் துணையாக எவருமில்லாத அனாதைகளுக்கும், சிறந்த நூலறிவு இல்லாதவர்களுக்கும்,நன்றாகச் சமைக்கப்பட்ட உணவை அளிப்பவர்கள் வானோர்களால் பெரிதும் விரும்பப் படுபவர்களாவார்கள்.

மகிழ்வோடு வாழ்வார்-யார்?

கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கான்
முடம்பட்டார் மூத்தார்மூப் பில்லார்க் - குடம்பட்
டுடையரா யில்லுளூ ணீத்துண்பார் மண்மேல்
படையராய் வாழ்வார் பயின்று.            
        (நூலின் 53 ஆவது பாடல்)

பதவுரை:

கடம்பட்டார்க்கு - கடன்பட்டவர்களுக்கும், (1)
காப்பு இல்லார்க்கு - தம்மைக் காப்பவர் எவரும் இல்லாதவர்களுக்கும், (2)
கைத்து இல்லார்க்கு - செல்வம் இல்லாத வறியவர்களுக்கும், (3)
தம் கால் முடம்பட்டார்க்கு - தம்முடைய கை கால்களை இழந்த முடம்பட்டவர்களுக்கும், (4)
மூத்தார்க்கு - வயது முதிர்ந்த முதியவர்களுக்கும் , (5)
மூப்பு இல்லார்க்கு - பெற்றோரும் மற்றோரும் இல்லாதவர்களுக்கும், (6)
உடம்பட்டு உடையராய் இல்லுள் - உள்ளமொத்து அன்புடையராய் வீட்டில்,
ஊண் ஈத்து உண்பார் - உணவுகொடுத்து உண்பவர்,
மண்மேல் பயின்று வாழ்வார் - உலகத்தில் உறவினருடன் அளாவி மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.

பொழிப்புரை:

கடன் பட்டவர்களுக்கும், தம்மை ஆதரிப்பவர் யாருமில்லாத அனாதைகளுக்கும், செல்வமில்லாத வறியவர்களுக்கும், தம் கைகால்களை இழந்த முடமானவர்களுக்கும், வயது முதிர்ந்த முதியவர்களுக்கும், பெற்றவர்களும் மற்றெவரும் இல்லாதவர்களுக்கும், உள்ளம் ஒத்து அன்புடையவர்களாய் வீட்டில் உணவளித்து உண்பவர் உலகில் உறவினர்களுடன் மகிழ்வோடு வாழ்வார்கள்.

செல்வம் யாரிடம் சூழ்ந்திருக்கும்?

பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்
கார்ப்பார் தமையாதுங் காப்பிலார் -தூப்பால 
நிண்டாரா லெண்ணாது நீத்தவர் மண்ணாண்டு
பண்டாரம் பற்றவாழ் வார். 
        (நூலின் 54 ஆவது பாடல்)

பதவுரை:

பார்ப்பார் - அந்தணர்,
பசித்தார் - பசித்தவர்,
தவசிகள் – தவஞ்செய்கின்றவர்,
பாலர்கள் - குழந்தைகள்,
கார்ப்பார் - பிறரால் வெறுக்கப்படுகின்றவர்கள்,
தமை காப்பு யாதும் இல்லார் - தம்மைக் காத்துக்கொள்ளுதற்குரிய ஆதரவு சிறிதும் இல்லாதவர்கள்,
தூப்பால நிண்டார் - அழுக்கற்ற நல்லொழுக்கத்தில் மிக்கவர்கள் என்பார்க்கு,
எண்ணாது நீத்தவர் - பயன் கருதாமல் அவர் துன்பங்களை நீக்கியவர்கள்,
மண் ஆண்டு பண்டாரம் பற்ற வாழ்வார் - உலகத்தை அரசாண்டு செல்வம் தம்மைச் சூழ்ந்திருக்க இன்பத்துடன் வாழ்வார்கள்.

பொழிப்புரை:

அந்தணர், பசித்தவர், தவம் செயகின்ற சான்றோர், பச்சிளங் குழந்தைகள், பிறரால் வெறுக்கப்படுகின்றவர்கள், தம்மைப் பாதுகாக்கும் ஆதரவு சிறுதும் இல்லாதவர்கள், சிறிதும் களங்கமற்ற நல்லொழுக்கத்தில் உள்ளவர்களின் துன்பங்களை சிறிதும் பயன் கருதாமல் நீக்கியவர்கள் உலகத்தை அரசாண்டுகொண்டிப்பர். செல்வம் எப்போதும் அவரைச் சூழ்ந்துகொண்டிருக்கும்.

சாபம் வந்து சேரும் - எப்போது?

பெருமை புகழறம் பேணாமை சீற்றம் 
அருமைநூல் சால்பில்லார் சாரி - னிருமைக்கும்
பாவம் பழிபகை சாக்காடே கேடச்சம்
சாபம்போற் சாருஞ் சலித்து.                               
        (நூலின் 60 ஆவது பாடல்)

பதவுரை:

பெருமை - பெரிய நிலைமையும்,
புகழ் - புகழும்,
அறம் - அறமும்,
சீற்றம் பேணாமை - சினத்தை விரும்பாமையும்,
அருமைநூல் சால்பு இல்லார் - அரிய நூலுணர்ச்சியும், பெருந்தன்மையும், இல்லாதவர்களை,
சாரின் - சேர்ந்தால்,
இருமைக்கும் - இம்மை மறுமை யிரண்டிலும்,
பாவம் – தீவினையும் (1)
பழி - பழியும், (2)
பகை - பகையும், (3)
சாக்காடு - சாவும், (4)
கேடு - பொருளழிவும், (5)
அச்சம் - அச்சமும், (6)
சாபம்போல் - சான்றோர்கள் இடுகின்ற ஆணைமொழியைப்போல்,
சலித்து சாரும் - தேர்ந்தெடுக்கப்பட்டாற்போல் வந்து சேரும்.

பொழிப்புரை:

பெருமையும், புகழும், அறமும், பேணாத சினமும், அருமை நூலுணர்ச்சியும், பெருந்தன்மைக் குணமும் இல்லாதவர்களைச் சார்ந்தால் இம்மை மறுமை இரண்டிலும் பாவம், பழி, பகை, சாக்காடு கேடு, அச்சம் எனும் ஆறும் சான்றோர்களிட்ட சாபத்தைப் போல தவறாமல் வந்து சேரும்.

கல்வியே உண்மையான அழகு:

இடைவனப்புந் தோள்வனப்பு மீடின் வனப்பும்
நடைவனப்பு நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல வெண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு.                                  
        (நூலின் 74 ஆவது பாடல்)         

பதவுரை:

இடை வனப்பும் - இடுப்பினழகும்,
தோள் வனப்பும் – தோள்களினழகும்,
ஈடின் வனப்பும் - செல்வத்தினழகும்,
நடைவனப்பும் - நடையினழகும்,
நாணின் வனப்பும் - நாணத்தினழகும்,
புடைசால் கழுத்தின் வனப்பும் - தசை கொழுவிய கழுத்தினழகும்,
வனப்பு அல்ல - உண்மை அழகாகா;
எண்ணோடு எழுத்தின் வனப்பே வனப்பு - இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே உண்மையழகாகும்.

பொழிப்புரை:

இடையினழகும், தோளின் அழகும், செல்வத்தின் அழகும், நாணத்தால் வருகின்ற அழகும் ,தசை கொழுவிய கழுத்தின் அழகும் உண்மையான அழகாகாது. மக்களுக்கு இனத்தோடு கூடிய இலக்கியக் கல்வி அழகே உண்மையான அழகாகும்.

இதனால்தான்

“எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்”
- என்று ஒளவையாரும்

"எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு."
- என்று திருவள்ளுவரும் பாடியுள்ளனர்.

இல்லாள் ஏற்றம் பெறவேண்டுமாயின் கல்வி மிகவும் இன்றியமையாதது.
அக்கல்வியின் சிறப்பினை நாலடியார் பாடலும் பின்வருமாறு கூறுகிறது.

“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் 
மஞ்ச ளழகும் அழகல்ல -நெஞ்சகத்து 
நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையாற் 
கல்வி யழகே யழகு .”           
        (131)

அதாவது,
தலை மயிர் முடியின் அழகும், வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும், மஞ்சள் பூச்சின் அழகும் அழகுகளல்ல. மனமறிய நல்லமாக வொழுகுகின்றோம் என உண்மையாக உணரும் கல்வியழகே உயர்ந்த அழகாகும் என இப்பாடலின் கருத்து அமைந்துள்ளது.

இனிதே வாழ்வார் - யார்?

தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி
வாயிழந்த வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார்
கைத்தூண் பொருளிழந்தார் கண்ணிலவர்க் கீய்ந்தார்
வைத்து வழங்கி வாழ்வார்.                                 
        (நூலின் 78 ஆவது பாடல்)

பதவுரை:

தாய் இழந்த பிள்ளை - தன் தாயை இழந்த பிள்ளைக்கும் ,
தலை இழந்த பெண்டாட்டி - தன் தலைவனை (கணவனை) இழந்த மனைவிக்கும்,
வாய் இழந்த வாழ்வினார் - வாய் பேச இயலாத வாழ்க்கையை யுடைய ஊமைகளுக்கும்,
வாணிகம் போய் இழந்தார் - வாணிகம் புரிந்து கைப்பொருளை யிழந்தவர்களுக்கும்,
கைத்து ஊண் பொருள் இழந்தார் - உணவுக்கு ஆதரவான செல்வப் பொருளை இழந்தவர்களுக்கும்,
கண் இல்லவர்க்கு - கண்ணில்லாத குருடர்களுக்கும்,
ஈய்ந்தார் - வேண்டுவன கொடுத்தவர்கள்,
வைத்து வழங்கி வாழ்வார் - பொருள்களை மிச்சமாய் வைத்துப் பிறர்க்கு அளித்து தாமுந் துய்த்து இனிது வாழ்வார்.

பொழிப்புரை:

தாயை இழந்த குழந்தைக்கும், கணவனை இழந்த மனைவிக்கும், பேச இயலாத ஊமைகளுக்கும், வாணிகம் செய்து கைப்பொருளை இழந்தவர்களுக்கும், உணவுக்கு ஆதரவான செல்வப் பொருளை இழந்தவர்களுக்கும், கண்ணிழந்த குருடர்களுக்கும் வேண்டியதை அளித்தவர்கள் பொருள்களை மிச்சமாய் வைத்துப் பிறருக்கு அளித்துத் தாமும் துய்த்து வையகத்தில் இனிது வாழ்வார்கள்.

புதல்வர்களில் பன்னிரு வகை:

மாண்டவர் மாண்ட வறிவினான் மக்களைப்
பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால் - பூண்ட
ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன்
கிரிதன்பௌநற்பவன் பேர்.                                
        (நூலின் 30 ஆவது பாடல்)
மத்த மயிலன்ன சாயலாய் மன்னியசீர்த்
தத்தன் சகோடன் கிருத்திரமன் - புத்திரி
புத்ரனப வித்தனொடு பொய்யி லுபகிருதன்
இத்திறத்த வெஞ்சினார் பேர்                 
        (நூலின் 31 ஆவது பாடல்)

மேற்காணும் இரண்டு பாக்களில் புதல்வர்களில் பன்னிருவகை பற்றியும் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வகைப்பாடாவது:

(1) அவுரதன் -கணவனுக்குப் பிறந்தவன்,
(2) கேத்திரசன் -கணவன் இருக்கும்போது மற்றொருவனுக்குப் பிறந்தவன்,
(3) காணீனன் -திருமணம் ஆகாத பெண்ணொருத்திக்குப் பிறந்தவன்,
(4) கூடன் -விபச்சாரத்தில் பிறந்தவன்,
(5) கிரீதன் -விலைக்கு வாங்கப்பட்டவன்,
(6) பௌநற்பவன் -கணவன் இறந்த பிறகு மறுமணம் புரிந்துகொண்ட இரண்டாவது கணவனுக்குப் பிறந்தவன்,
(7) தத்தன் -சுவீகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டவன்,
(8) சகோடன் -திருமணம் செய்துகொள்ளும்போதே கற்பத்திலிருந்து பிறந்தவன்,
(9) கிருத்ரிமன் -கண்டு எடுத்து வளர்க்கப்பட்டவன்,
(10) புத்திரி-புத்திரன் -மகள் வயிற்றுப் பிள்ளை,
(11) அபவித்தன் - பெற்றோர்களால் கைவிடப்பட்டு மற்றவர்களால் வளர்க்கப்பட்டவன்
12) கிருதன் - காணிக்கையாக வந்தவன்,

இவ்வகைப்பாடு முந்தைய தமிழ்ச்சங்க நூல்கள் எவற்றிலும் கூறப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நூலில் மட்டும் காணப்படும் இச்செய்தி ஒரு சிறப்பாகும்.

முடிவுரை:

இவ்வாறாக நான்கு வரிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலிலும் அரிய ஆறு கருத்துக்கள் சுவையாகப் புகுத்தப் பட்டுள்ளன. இந்நூலின் பெயரே மருந்தைத்தான் குறிக்கின்றது. இம்மருந்து உள்ளத்துக்கு வலிமையையும் தெம்பையும் தரத்தக்கதாகும். இந்நூலை முழுமையாகப் படித்து நற்பயன் பெறவேண்டும் என்பதே ஆசிரியரின் நோக்கமாக அமைந்துள்ளது.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்