சங்க இலக்கியம், பதினெண்மேற் கணக்கு, பதினெண்கீழ்க் கணக்கு எனும் இரு பிரிவுகளைக் கொண்டது.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய பதினெட்டு நூல்கள் மேற்கணக்கில் அடங்கும்.
நாலடி, நான்மணி என தொடங்கும் பாடற் பட்டியலில் உள்ள பதினெட்டு நூல்கள் கீழ்க் கணக்கு நூல்களில் அடங்கும்.
பதினெண்கீழ்க்க கனக்குப் பாடற் பட்டியல்:
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுக்கங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு"
இது வொரு நீதிக்கு கருத்தைக் கூறும் நீதி நூல். பாடல் வொவ்வொன்றும் நான்கு அடிகளைக் கொண்டது.
பாடல் வொவ்வொன்றும் நான்கு அடிகளைக் கொண்டிருத்தலால் நாலடியார் எனப் பெயர் பெற்றது போலவும்,
பாடல் வொவ்வொன்றிலும் மும்மூன்று கருத்துக்கள் கூறப் பட்டமையால் திரிகடுகம் என்ப பெயர் பெற்றது போலவும்,
பாடல்களில் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக் கடிகை எனப் பெயர் பெற்றது.
இந் நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். விளம்பி என்பது இவரின் ஊர்ப் பெயரையும் நாகனார் என்பது இவரின்
இயற் பெயரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆயினும், மருதனிள நாகனார், வெள்ளைக்குடி நாகனார் என்று
நாகனார் எனும் பெயரைத் தாங்கிய புலவர்கள் பலர் நூல்களில் காணப் படுவதால் விளம்பி என்பது ஊரின் பெயராக
அல்லாமல் வேறு காரணம் பற்றி அடைமொழியாக இருத்தல் கூடுமென்ற கருத்தும் உண்டு.
இந் நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இரண்டிலும் மாயவனைப் பற்றி(திருமால்) பாடப் பெற்றவை.
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும், நிறம்.
நிலவானது நிலைத்த பேறுடைய திருமாலின் முகத்தை ஒத்திருக்கும். ஒளிரும் ஞாயிறு அவனது சக்கரத்தை ஒத்திருக்கும்.
வயலில் காணப்படும் தாமரை அவனது கண்களை ஒத்திருக்கும். காயாம்பூவானது அவனது திருமேனி நிறத்தை ஒத்திருக்கும்.
படியை மடியகத்து இட்டான்; அடியினான்
முக் கால் கடந்தான் முழுநிலம்; அக் காலத்து
ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்; - சோவின்
அருமை அழித்த மகன்.
உலகத்தைத் தன் வயிற்றுக்குள் அடக்கியவனான திருமால் தன் திருவடிகளால் மூவுலகத்தையும் அளந்தான்.
பசுக்களின் குளிரைப் போக்குவதற்காகக் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தான். பாணாசுரனது நெருப்பு மதிலை
அழித்து அநிருத்தனை மீட்டான்.
இந் நூற் பாடல் 22-இல் பொய்யாமை பற்றியும் பாடல் 26-இல் கொல்லாமை மற்றும் புலால் உண்ணாமை பற்றியும்
கூறப்பட்டிருத்தலால் ஆசிரியர் நாகனார் சமணர் எனக் கருதுவாருமுண்டு.
புகழ் செய்யும் பொய்யா விளக்கம் - இகந்தொருவர்ப்
பேணாது செய்வது பேதைமை - காணாக்
குருடனாச் செய்வது மம்மர் - இருள்தீர்ந்த
கண்ணராச் செய்வது கற்பு. (22)
பாடலின் கருத்து:
பொய்யாமை புகழையும், அறியாமை தீயவை செய்தலையும், கல்லாமை அறியாமையையும், கல்வியானது அறிவையும் உண்டாக்கும்
அலைப்பான் பிறவுயிரை யாக்கலுங் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலுங் குற்றம்
கொலைப்பாலுங் குற்றமே யாம். (26)
பாடலின் கருத்து:
பிறவுயிர்களைக் கொன்று உண்பதற்காக வளர்த்தலுங் குற்றம்; அங்ஙனங் கொல்லாமல் அவற்றின் ஊனை விலைக்கு வாங்கி
உண்ணலுங் குற்றம்; சொல்லத்தகாதவற்றைச் சொல்லலுங் குற்றம்; கொல்லலுங் குற்றமேயாம்.
இனி இந்நூற்பா சிலவற்றுள் சொல்லப்பட்டுள்ள நீதிக்கு கருத்துக்களைப் பார்ப்போம்.
கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு
உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில். (7)
பதவுரை:
கள்வம் என்பார்க்கும் - திருடுவதற்கு நேரம் பார்ப்பவர்க்கும்,
காதலிமாட்டு - காதலியினிடத்தில்,
உள்ளம் வைப்பார்க்கும் - விருப்பம் கொண்டவர்க்கும்,
ஒண்பொருள் - உயரிய செல்வப்பொருளை,
செய்வம் என்பார்க்கும் - மேலும் பெருக்கக் கருதி உழைப்பவர்க்கும்,
அப் பொருள் - சேர்த்த அப்பொருளை,
காப்பார்க்கும் - களவு போகாமல் பாதுகாப்பவர்க்கும்,
துயில் இல்லை - உறக்கம் இல்லை.
பாடலின் கருத்து: திருடர்க்கும், காதலியினிடத்தில் விருப்பம் கொண்ட காதலனுக்கும், பொருள் தேடுவார்க்கும்,
அப்பொருளைப் பாதுகாப்பார்க்கும் தூக்கம் இராது.
நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக் கணியென்ப தாமரை பெண்மை
நலத்துக் கணியென்ப நாணந் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம். (9)
பதவுரை:
நிலத்துக்கு அணி என்ப - வயலுக்கு அழகென்று சொல்லப் படுவது;
நெல்லும் கரும்பும் - நெற்பயிருங் கரும்பின் பயிரும்,
குளத்துக்கு அணி என்ப - குளங்களுக்கு அழகு என்று சொல்லப் படுவது;
தாமரை - செந்தாமரை,
பெண்மை நலத்துக்கு - பெண் (தன்மைக்குரிய) கற்பாகிய நன்மைக்கு,
அணி என்ப - அழகென்று சொல்லப் படுவது;
நாணம் - நாணுமியல்பு,
தனக்கு அணி ஆம் - ஒருவனுக்கு அழகாவது,
தான் செல் உலகத்து அறம் - தான் செல்லும் மறுமை யுலகத்துக்குத் துணையாகச் செய்யப்படும் அறங்கள்.
பாடலின் கருத்து: நெல்லுங் கரும்புங் கழனிக்கு அழகு; தாமரை குளத்துக்கு அழகு; நாணம் பெண்மைக்கு அழகு;
அறங்கள் ஆண்மைக்கு அழகாகும்.
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல். (15)
பதவுரை:
இன்னாமை வேண்டின் - தீதை (இழிவை) ஒருவன் விரும்பினால்,
இரவு எழுக - யாசகம் செய்க;
இந்நிலத்து - இவ்வுலகத்தில்,
மன்னுதல் வேண்டின் - எக்காலத்தும் நிலைபெறுதலை விரும்பினால்,
இசை நடுக - புகழ் நிறுத்துக,
தன்னொடு செல்வது வேண்டின் - தன்னுடன் துணையாகச் (மறுமைக் காலத்தில்) செல்வதொன்றை விரும்பினால்,
அறம் செய்க -அறங்களைச் செய்க,
வெல்வது வேண்டின் - பிறரை வெல்லல் வேண்டுமாயின்,
வெகுளி விடல் - சினத்தை விடுக.
பாடலின் கருத்து: இழிவை விரும்பினால் இரக்க; அழியாமை வேண்டினால் புகழ் புரிக; உறுதுணையை வேண்டினால் அறஞ்செய்க;
வெல்லல் விரும்பினால் சினத்தை விடுக.
மனைக்குப்பாழ் வாள்நுத லின்மைதான் செல்லுந்
திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்றறி வில்லா உடம்பு. (20)
பதவுரை:
மனைக்குப் பாழ் - வீட்டிற்குப் பாழாவது,
வாள் நுதல் இன்மை - சிறந்த மனைவி யில்லாமை;
தான் செல்லும் - தான் போகும்,
திசைக்குப் பாழ் - ஊர்ப்புறங்கட்குப் பாழாவது,
நட்டோரை இன்மை - நண்பர்களில்லாமை;
இருந்த அவைக்குப் பாழ் - பலரும் கூடியிருந்த அவைக்குப் பாழாவது,
மூத்தோரை இன்மை - கல்வி கேள்வி களில் சிறந்த சான்றோர் இல்லாமை;
தனக்குப் பாழ் - தனக்குப் பாழாவது,
கற்றறிவு இல்லா உடம்பு - கல்வியறிவு பெறாத வெறும் புலாலுடம்பு.
பாடலின் கருத்து: மனைவியில்லா மனை பாழ்; நண்பரில்லாப் பக்கம் பாழ்; ஆன்றோரில்லா அவை பாழ்; கற்றறிவில்லா வுடம்பு பாழ்
கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணருங் கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறி
இப்பா லுலகின் இசைநிறீஇ - உப்பால்
உயர்ந்த உலகம் புகும். (30)
பதவுரை:
கற்ப - அறிவு நூல்களைக் கற்பதனால்,
கழிமடம் - மிக்க அறியாமை,
அஃகும் - குறையப்பெறும்;
மடம் அஃக - அறியாமை குறைய,
புற்கம் தீர்ந்து - புல்லறிவு நீங்கி,
இவ்வுலகின் - இவ்வுலகத்தின்,
கோள் உணரும் - இயற்கையை அறியப்படும்;
கோள் உணர்ந்தால் - அவ் வியற்கையை யறிந்துகொண்டால்,
தத்துவமான - உண்மையான, நெறி படரும் - அருணெறியிற்புகலாம்;
அந் நெறி - அந் நெறியினால்,
இப்பால் உலகின் – இவ்வுலகின்கண்,
இசைநிறீஇ - புகழ் நிறுத்தி,
உப்பால்- மறுமையில்,
உயர்ந்த உலகம் புகும் - உயர்ந்த வீட்டுலகத்திற் புகலாம்.
பாடலின் கருத்து: ஒருவன் அறிவு நூல்களைக் கற்றால் அறியாமை குறையப்பெறுவான்!
அறியாமை குறையப் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான்;
அறிய மெய்ந்நெறியாகிய நன்னெறியில் செல்வான்;
செல்ல, இவ்வுலகத்திற் புகழை நிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான்.
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ
டெண்ணக் கடவுளு மில். (55)
பதவுரை:
கண்ணின் - கண்ணைப்போல்,
சிறந்த உறுப்பு - மேலான உறுப்பு,
இல்லை - வேறில்லை;
கொண்டானின் - தன்னைத் திருமணஞ் செய்து கொண்ட கணவனைப் போல,
துன்னிய கேளிர் - நெருங்கிய உறவினர்,
பிறர் இல்லை - (மனைவிக்கு) வேறொருவருமில்லை;
மக்களின் - தம் மக்களைப்போல்,
ஒண்மையவாய் - ஒளியுடையவாய்,
சான்ற - அமைந்த,
பொருள் - வேறு பொருள்,
இல்லை - பெற்றோர்க்கில்லை;
ஈன்றாளோடு - தாய்க்கு நிகராக,
எண்ண - மதிப்பதற்குரிய,
கடவுளும் இல் - கடவுளும் வேறில்லை,
பாடலின் கருத்து: ஒருவனுக்குக் கண்ணைப்போல மேலான உறுப்பு வேறில்லை;
குலமகளுக்குக் கணவனைப்போல நெருங்கிய உறவினர் வேறில்லை;
பெற்றோர்க்கு மக்களைப்போல ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை;
குழந்தைகட்குத் தாயைப்போல மேலான கடவுள் வேறெதுவுமில்லை.
ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து
வாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்
தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்
உரன்சிறி தாயின் பகை (100)
பதவுரை:
ஏரி சிறிதாயின் - குளம் சிறிதானால்.
நீர் ஊரும் - நீர் வழிந்து விடும்.
இல்லத்து - வீட்டில்,
வாரி சிறிதாயின் - வருமானங் குறைவானால்,
பெண் ஊரும் - மனையாள் நிலை கடந்து போவாள்;
மேலைத் தவம் சிறிதாயின் - முற்பிறப்பின் நல்வினை குறைவானால்,
வினை ஊரும் - தீவினை பெருகும்;
உரன் சிறிதாயின் - வலிமை சிறிதானால்,
பகை ஊரும் - பகைவர் வெற்றி கொள்வர்
பாடலின் கருத்து: ஏரி சிறிதானால் நீர் வழிந்து போய்விடும்.
வீட்டில் வருவாய் குறைவானால் மனையாள் வரம்பு கடந்து பேசுவள்;
முன்னைத் தவம் சிறிதானால் தீவினை மிகுந்து வருத்தும்;
வலிமை சிறிதானால் பகைவர் மேற்போந்து வென்றிடுவர்.
வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்