திருமந்திரம் கூறும் ஐம்புலன் அடக்கம்

வழங்கியவர் தசா . 11 Sep 2021

(Thirumandhiram Koorum Aimpulan Adakkam)
(Tirumantiram kūṟum Aimpulaṉ aṭakkam)

தகவல்களின் மூலம்:

1. திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு - டாக்டர் சுப. அண்ணாமலை  
2. உண்மை விளக்கம் - https://shaivam.org/   
3. https://thevaaram.org  

புலன்கள்/தன்மாத்திரைகள் என்பவை ஐம்பூதங்களின் பண்புகள் ஆகும்.

அவைகள் 1.ஓசை, 2.ஊறு, 3.ஒளி, 4.சுவை, 5.நாற்றம்

பொறிகள்/ஞானேந்திரியங்கள் என்பவை உடலில் உள்ள உறுப்புகள் ஆகும். இவைகள் புலன்களை பயன்படுத்தி ஐம்பூதங்களுடன் தொடர்பை ஏற்படுத்தும்.

அவைகள் 1.செவி, 2.மெய், 3.வாய், 4.கண், 5.மூக்கு

கன்மேந்திரியங்கள் என்பவை புலன்கள் மற்றும் பொறிகளால் விளையும் செயல்களாகும்.

அவைகள் 1.வாக்கு, 2.பாதம், 3.பாணி, 4.பாயுரு, 5.உபத்தம்

புலன்கள், பொறிகள், மற்றும் கன்மேந்திரியங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும்.

ஐம்பூதங்கள், புலன்கள், பொறிகள், மற்றும் கன்மேந்திரியங்கள் பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.

இறைவன் திருவடி அடைய புலனடக்கம்:

ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அவன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே
- 2011 - ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- ஏழாம் தந்திரம் 

ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது - ஐம்புலன்களை அடக்குவது, உலகத்தையே வெல்வதாகும்.

ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது - ஐம்புலன்களை அடக்குவது, அரிய தவமாகும்.

ஐந்தில் ஒடுங்கில் அவன்பதம் ஆவது - ஐம்புலன்களை அடக்கினால், இறைவன் திருவடியை அடையலாம்.

ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே - ஐம்புலன் அடக்கியவர், இறைவன் அருளுக்கு உரியவர் ஆவர்.

அடக்க முயன்றால் உள்ளதும் போயிற்று:

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே
- 2010 - ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- ஏழாம் தந்திரம் 

வேழம் - கரும்பு / யானை
முழக்கு - ஒலி

முழக்கி எழுவன மும்மத வேழம் - மூன்று மதமும் கொண்ட யானை பிளிறிக்கொண்டு ஓடுவதுபோல் - ஐந்து புலன்களும் ஆரவாரம் செய்து விஷயங்களை அனுபவிக்கத் துடித்தன.

அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன் - ஐம்புலன்களை அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன்.

பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக் - ஐம்புலன்கள் அந்த கோட்டையிலிருந்து தப்பி ஓடி பெருங்கேடு விளைத்தன.

கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே - நன்கு வளர்ந்திருந்த கரும்பை சிதைத்து விட்டன - என்னிடம் ஏற்கனவே சேர்ந்து இருந்த அறிவை கெடுத்துவிட்டன.

அடக்க வேண்டா அறிவை பெறவேண்டும்:

அஞ்சும் அடக்கு, அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கு இல்லை,
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே
- 2009 - ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- ஏழாம் தந்திரம் 

அசேதனம் - அறிவில்லாதது
அமரர் - வானோர்

அஞ்சும் அடக்கு, அடக்கு என்பர் அறிவிலார் - அறிவில்லாதோர் ஐம்புலன்களையும் அடக்கு என்று மீண்டும் மீண்டும் கூறுவர்.

அஞ்சும் அடக்கில் அமரரும் அங்கு இல்லை - ஐந்தும் அடங்கினால் வானோரும் அங்கு வாழவியலாது.

அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு - அவற்றை அடக்கினால் அறிவு பெற வழி இல்லை என்று

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே - அவற்றை அடக்க வேண்டாத அறிவை பெற்றேன்.

சுழுமுனை நாடுதல்:

இளைக்கின்றவாறு அறி இன்னுயிர் வைத்த
கிளைக்கு ஒன்றும் ஈசனைக் கேடு இல் புகழோன்
தளைக் கொண்ட நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க,
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் பெடைத்தே.
- 2013 - ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- ஏழாம் தந்திரம் 

இளைத்தல் - தளர்தல் - பிறந்து பிறந்து எய்தல்
கேடு இல் புகழோன் - யோகி
பெடைத்து - பெண் தன்மை உடையது - நாயகி
கிளைக்கு ஒன்றும் - அடியார்க்கு இசையும்
துளைக்கொண்டது - சுழுமுனை

இளைக்கின்றவாறு அறி இன்னுயிர் வைத்த - தளரும் தன்மையுடையதாக வைத்த இன்னுயிரை அறிந்த யோகி

கிளைக்கு ஒன்றும் ஈசனைக் கேடு இல் புகழோன் - ஈசனை வழிபடும் அடியார்களுடன் சேர்ந்து, ஈசனை அடையும் பொருட்டு

தளைக் கொண்ட நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க - ஐம்புலன்களின் ஆட்டத்தை ஒடுக்க,

துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் பெடைத்தே - சுழுமுனை வழிச் சென்று, சிவானந்தம் பெற்று, சிவனது நாயகியாகத் தன்னை உணர்வான்.

மனதை அடக்கி எங்கும் கோயில் காண்க:

நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே.
- 2015 - ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- ஏழாம் தந்திரம் 

நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப் - எல்லா உயிர்களிடத்தும் இயங்குகின்ற இறைவனை நாள்தோறும் எண்ணி

படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக் - எல்லா இடத்திலும் அலைகின்ற மனதை படிப்படியாக ஒடுக்கி

குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில் - ஏதாவது ஒரு இலக்கை இடைவிடாது நினைத்தால்

வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே - உலகு எங்கும் கோயிலாக விளங்கும்.

பிராணன் அடங்கினால் மனமும் அடங்கும்:

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கின்  பிறப்பு  இறப்பு இல்லை;
பிராணன் மடைமாறிப் பேச்சு  அறுவித்துப்
பிராணன் அடைவே  பேறு உண்டிடீரே
- 560 - பிராணாயாமம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- மூன்றாம் தந்திரம் 

பேராது அடங்கி - இடம்பெயராமல் அடங்கி

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப் - உயிராற்றல் மூச்சுக்காற்றுடனும், மனதோடும் பல வழியில் செல்லாமல் அடங்கி

பிராணன் இருக்கின் பிறப்பு இறப்பு இல்லை - அடங்கியிருக்கும் பிராணனால் பிறப்பு இறப்பு இல்லை.

பிராணன் மடைமாறிப் பேச்சு அறுவித்துப் - உயிராற்றலை வழி மாற்றி சுழுமுனை வழியாக செலுத்தி, மௌன நிலையை அடைந்து

பிராணன் அடைவே பேறு உண்டிடீரே - உயிர் முறையாகப் பெறவேண்டிய பேற்றினை பெற்று நுகர்வீராக.

காலத்தை(மரணத்தை) வெல்ல:

மூலத் துவாரத்தை முக்காரம்  இட்டிரு;
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு;
வேல்  ஒத்த கண்ணை வெளியில் விழித்திரு;
காலத்தை வெல்லும்  கருத்து-அது தானே.
- 576 - பிரத்தியாகாரம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- மூன்றாம் தந்திரம் 

முக்காரம் இடுதல் - அடைதல்
மூலத்துவாராம் - மூலாதாரத்தின் துவாரம்
மேலைத்துவாராம் - உச்சந்தலையில் உள்ள துவாரம் - பிரம்மரந்திரம் - (anterior fontanelle)
வெளி - சிதாகாயம் - ஆன்மஉணர்வு என்னும் வெளி

மூலத் துவாரத்தை முக்காரம் இட்டிரு - அபான வாயு வெளியேறும் மலவழியை அடைக்கவும்.

மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்திரு - உச்சந்தலையில் உள்ள துவாரத்தை நினைக்கவும்

வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்திரு - அகவெளியில் உணர்வை செலுத்த வேண்டும்.
காலத்தை வெல்லும் கருத்து-அது தானே - காலத்தை வெல்ல முடியும்.

அகவொளி காண்க - ஐம்புலன்களை தானாக அடங்கச்செய்தல்:

ஐம்புலன்களை தானாக அடங்கச்செய்தல்
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டு  ஊடே வெளியுறத் தான் நோக்கிக்
காணாக்கண், கேளாச் செவி என்று  இருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழி அதுவாமே.
- 581 - தாரணை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- மூன்றாம் தந்திரம்

வெளி - சிதாகாயம் - ஆன்மஉணர்வு என்னும் வெளி

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி - சுழன்று கொண்டிருக்கும் மனதை இடைவிடாது நினைத்து சுழுமுனையில் நிறுத்தி

வீணாத்தண்டு ஊடே வெளியுறத் தான் நோக்கிக் - சுழுமுனை வழியாக சிதாகாயத்தை உற்று நோக்க - சுழுமுனை வழியாக புருவமதிக்கு ஏறும் குண்டலி சக்தியால் தூண்டப்பெறும் உயிராற்றலால் சிதாகாயத்தை உற்று நோக்க வேண்டும்.

காணாக்கண், கேளாச் செவி என்று இருப்பார்க்கு - பார்க்க வேண்டாத கண், கேட்க வேண்டாத காது என்று இருப்பார்க்கு - ஐம்புலன்களை தானாக அடங்கச்செய்தல்

வாழ்நாள் அடைக்கும் வழி அதுவாமே - வாழ்நாள் கழியாமல் அடைக்கும் வழியாகும்.

புலன்களை அடக்க தாரணை செய்க:

அரித்த  உடலை ஐம்பூதத்தில் வைத்துப்
பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து
தெரித்த மனாதி சித்தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே
- 590 - தாரணை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- மூன்றாம் தந்திரம் 

சத்தாதி - சத்த ஆதி - ஐம்புலன் - தன்மாத்திரை - 1.ஓசை, 2.ஊறு, 3.ஒளி, 4.சுவை, 5.நாற்றம்
சித்தாதி - சித் ஆதி - சித்தும் சத்தும் - அறிவும் உண்மையும்
மனாதி - மன்னன் முதலிய நான்கு அந்தக்கரணங்கள் (1.மனம், 2.புத்தி, 3.சித்தம், 4.அகங்காரம்)
தற்பரம் – பரம்பொருள்
தாரணை - எட்டு யோக நிலைகளில் ஒன்று. (1.இயமம், 2.நியமம், 3.ஆதனம், 4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம், 6.தாரணை, 7.தியானம், 8.சமாதி)

எட்டு யோக நிலைகளைப் பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்

அரித்த உடலை ஐம்பூதத்தில் வைத்துப் பொருத்த - புலன் இச்சை அரித்த உடலை ஐம்பூதத்தில் ஒடுக்கி

ஐம்பூதம் சத்தாதியில் போந்து - ஐம்பூதங்களை தன்மாத்திரைகளில் ஒடுக்கி

தெரித்த மனாதி சித்தாதியிற் செல்லத் தரித்தது தாரணை தற்பரத் தோடே - மன்னன் முதலிய நான்கு அந்தக்கரணங்களை சத்சித் ஆனந்தத்தில் ஒடுங்க தாரணை செய்தால் பரம்பொருள் அனுபவம் பெறலாம்.

புலன்கள் தானாக அடங்கும் - அமுதம் பருகும் இன்பம் விளையும்:

விடாத மனம் பவனத்தொடு மேவி,
நடாவு சிவசங்கின் நாதம்  கொளுவி
கடா விடா ஐம்புலன் கட்டுண்ணும்; வீடு
படாதன இன்பம் பருகு  ஆர் அமுதமே
- 872 - சந்திர யோகம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- மூன்றாம் தந்திரம்

பவனம் - காற்று
மேவி - தங்கச்செய்தல்(To cause to ஸ்டே)
கொளுவி - கொளுவு(Hook / join together)
நடாவு - நடவு - செலுத்த (To cause to go)
வீடு படாதன - விடுதல் முடியாத

விடாத மனம் பவனத்தொடு மேவி - ஐம்புலன்களை விடாத மனம், பிராணனுடன் சேர்த்து,

நடாவு சிவசங்கின் நாதம் கொளுவி - அதை பிராணாயாமத்தால் உண்டாகும் நாத ஒலியுடன் செலுத்த வேண்டும்

கடா விடா ஐம்புலன் கட்டுண்ணும் - அவ்வாறு செலுத்தும் போது புலன்கள் தானாக அடங்கும்

வீடு படாதன இன்பம் பருகு ஆர் அமுதமே - அப்பொழுது விடுதல் முடியாத, அதுவரை கிடைக்காத அமுதம் பருகும் இன்பம் விளையும்.

இறைவனைப்போற்று, புலன் அடங்கும்:

போற்றிசைத்தும் புனிதன் திருமேனியே 
போற்றிசெய்; மீண்டே புலன் ஐந்தும் புத்தி ஆம்; 
நால் - திசைக்கும், பின்னை, ஆற்றுக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே
- 2017 - ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- ஏழாம் தந்திரம்

ஆற்று - குளிரச் செய்
ஊற்று - ஊறு - ஈரம் - Spring

போற்றிசைத்தும் புனிதன் திருமேனியே - எதையேனும் போற்றினால், சிவனது திருமேனியைப் போற்று

போற்றிசெய்; மீண்டே புலன் ஐந்தும் புத்தி ஆம்; - அப்படி செய்தால், ஐம்புலன்களும் புத்தியுள் அடங்கும்

நால் - திசைக்கும், பின்னை, ஆற்றுக்கும் நாதனை - பிறகு நான்கு திசைகளிலும் இருந்து குளிர்ந்த அனுபவத்தை தரும் நாதனை

ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே - ஊற்றுகை உள்ளத்தில் நிறுத்தி, அவனோடு ஒன்றி இருக்கவேண்டும்.

சிந்தையில் சிவனை நிறுத்து:

கைவிடல்  ஆவது ஒன்று இல்லை, கருத்தினுள்
எய்தியவனை இயல்பினால் ஏத்துமின்;
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய் வருடு ஐய புலன்களும் ஐந்தே
- 2019 - ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- ஏழாம் தந்திரம்

ஐ - நுட்பம்
வருடு - பொருந்திய

கைவிடல் ஆவது ஒன்று இல்லை - ஐம்புலன்களை அடக்க கைவிட வேண்டியது ஒன்றும் இல்லை

ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய் வருடு ஐய புலன்களும் ஐந்தே - ஐம்பொறிகளின் ஆசையினால் தோன்றிய பொய் பொருந்திய, நுட்பமானவைகளே ஐம்புலன்கள்

கருத்தினுள் எய்தியவனை இயல்பினால் ஏத்துமின் - சிந்தையுள் சிவனை நிறுத்தி மனதாலும் சொல்லாலும் போற்ற வேண்டும்.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்