1. திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு - டாக்டர் சுப. அண்ணாமலை
2. உண்மை விளக்கம் - https://shaivam.org/
3. https://thevaaram.org
தத்துவ தாத்துவிகங்கள் பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.
மானின்கண் வான் ஆகி, வாயு வளர்ந்து, அனல்
கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்தும் செறிந்து அஞ்சு பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே
- 196 - சருவ சிருட்டி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- இரண்டாம் தந்திரம்
மான் - பிரகிருதி மாயை – மகத்து
அனல் கான் – செறிந்த தீ
தேன் – சுவை
பூ – பூமி
வெளிப்பட்ட பிரகிருதி மாயையில் இருந்து வான் உண்டாகி, அதிலிருந்து வாயு வளர்ந்து, வாயுவிலிருந்து செறிந்த அனல் சேர்ந்து நீர் உண்டாகி, நீர் கலந்து கடினமான மற்றும் சுவை உடைய பூமி உண்டாகி ஐந்து பூதமாய் நின்று பொருந்தும் புவனமே
கருத்து: மகத்து என்னும் பிரகிருதியில் இருந்து ஐந்து பூதங்களும் உண்டாகின.
நீரகத்து இன்பம் பிறக்கும், நெருப்பு இடை
காயத்தில் சோதி பிறக்கும், அக்காற்று இடை
ஓர்வு உடை நல் உயிர், பாதம் ஒலி சத்தி
நீர் இடை மண்ணின் நிலை பிறப்பு ஆமே
- 199 - சருவ சிருட்டி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- இரண்டாம் தந்திரம்
இன்பம் - சுவை
பாதம் - ஆகாயம்
காயம் - உடம்பு
ஓர்வு - அறிவு
நிலை – திண்மை
நீரில் இன்பமாகிய சுவை பிறக்கும்,
நெருப்பின் இடை உடம்பில் சோதி(ஒளி) பிறக்கும்
காற்றின் இடை அறிவில் நல் உயிர் உடையாகிய மெய்யின் ஊறு பிறக்கும்
பாதம் என்கிற ஆகாயத்தில் ஒலி சத்தி பிறக்கும்
மண்ணில் நிலை என்கிற திண்மை (நாற்றம்) பிறக்கும்
ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என்
போகாத சத்தியுள் போந்து, உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன் மால் பிரமனாய்
ஆகாயம் பூமியும் காண அளித்தலே
- 211 - சருவ சிருட்டி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- இரண்டாம் தந்திரம்
போகாத - நித்தியமான
ஐம்பூதங்களின் ஆதி ஆகாயம், ஐம்பூதங்களின் தலைவர்களுள் ஆதி சதாசிவர், அவர் நித்தியமான சத்தியுள் சேர்ந்து, மாகாய ஈசன்(மயேசுரன்), அரன் (உருத்திரன்), மால் (திருமால்), பிரமனாய் நின்று ஆகாயம் முதல் பூமி வரை (முறையே ஆகாயம் , காற்று, அனல், நீர், பூமி) இயக்குகின்றான்.
பாரது பொன்மை பசுமை யுடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதங் கறுப்பை யுடையது
வானகந் தூம மறைந்துநின் றாரே
- 2120 - அவத்தை பேதம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- எட்டாம் தந்திரம்
பார் - நிலம்
கார் - மேகம்
நிலத்தின் நிறம் பொன்மை அது பசுமை தன்மையுடையது
நீரின் நிறம் வெண்மை, நெருப்பின் நிறம் செம்மை
மேகத்தை உந்தும் காற்றின் நிறம் கறுப்பு
வானத்தின் நிறம் புகை, இவற்றை அதன் தெய்வங்கள் மறைந்து உறைக்கின்றன
மண்ணினில் ஒன்றும்; மலர் நீரும் அங்கு ஆகும்;
பொன்னினில் அங்கி, புகல் வளி, ஆகாசம்
மன்னும்; மனோ, புத்தி, ஆங்காரம் ஓர் ஒன்றாய்
உன்னி முடிந்தது பூத செயமே
- 2126 - அவத்தை பேதம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- எட்டாம் தந்திரம்
நிலத்தின் இடமான சுவாதிட்டானத்தில் உயிராற்றல் அடங்கும் (துரியாதீதம் - உயிர்ப்பு அடக்கம்)
நீரின் இடமான மணிபூரகத்தில் மேலே அடங்கிய உயிராற்றல் மலரும்
பொன் போன்ற நெருப்பிற்கு இடம் அனாகதம்
காற்றின் இடம் விசுத்தி
ஆங்காயத்தின் இடம் ஆக்ஞை
மேலே உள்ள ஆதாரங்களில் ஆன்மாவானது முறையே மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு அந்தக் கரணங்களுடனும் இருக்கும்.
கருத்து: மூலக்கனலை உயிராற்றலுடன் மூலாதாரத்தில் இருந்து ஆக்ஞை வரை ஏற்றுபவன் ஐந்து பூதங்களையும் வெல்கிறான்.
முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைக ளைவர்மு னாளில்லை
கன்னியைக் கன்னியே காதலித் தாளே
- 2127 - அவத்தை பேதம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- எட்டாம் தந்திரம்
கன்னி - சிற்சத்தி / மாயை
முதலில் தோன்றிய ஆகாயத்திற்கு குணம் ஒன்று - ஓசை
அதிலிருந்து தோன்றும் காற்றுக்கு குணம் இரண்டு - ஓசை, ஊறு
அதிலிருந்து தோன்றும் நெருப்புக்கு குணம் மூன்று - ஓசை, ஊறு, ஒளி
அதிலிருந்து தோன்றும் நீருக்கு குணம் நான்கு - ஓசை, ஊறு, ஒளி, சுவை
அதிலிருந்து தோன்றும் நிலத்திற்கு குணம் ஐந்து - ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம்
இவற்றை சிவன் சிற்சத்தியுடன் சேர்ந்து மாயையில் இருந்து படைத்தான்.
செவி, மெய், கண், வாய், மூக்குச் சேர் இந்திரியம்
அவி இன்றிய மனம் ஆதிகள் ஐந்தும்
குவிவு ஒன்று இலாமல் விரிந்தும் குவிந்தும்
தவிர்வு ஒன்று இலாத சராசரம் தாமே
- 2607 - விசுவக் கிராசம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
- எட்டாம் தந்திரம்
அவி இன்றிய - அழிவு இல்லாத
தவிர்வு ஒன்று இலாத - அழியாத
மனம் ஆதிகள் ஐந்தும் - மனம் முதலிய ஐந்தும் - இவை ஐந்தும் யாது என்று இரண்டு வேறுபட்ட கருத்துக்களாக நமக்கு கிடைக்கிறது
மனம் புத்தி அகங்காரம் சித்தம் மற்றும் பிரகிருதி
என்று thevaaram.org கூறுகிறது
மனம் முதலிய நான்கு அந்த கரணங்கள் மற்றும் ஐந்து கலைகள் (கலை, காலம், நியதி, வித்தை, அராகம்) என்று சுப. அண்ணாமலை கூறுகிறார்.
இந்திரியங்கள் ஐந்தும், அழிவில்லாத மனம் முதலிய ஆதிகள் ஐந்தும் குவிதல் மட்டும் இல்லாமல் விரியப்பெற்றும், குவியப்பெற்றும் தொடர்ந்து நடைபெறும். இதனால் சராசரம் என்ற உயிர் அழியாது.
கருத்து: உணர்வு குறைதல் உயிர்க்கு கேடு அன்று.
வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்