திருமந்திரம் கூறும் எட்டு யோக நிலைகள்

வழங்கியவர் தசா . 05 Sep 2021

(Thirumandhiram Koorum Ettu Yoga Nilaigal)
(Tirumantiram kūṟum eṭṭu yōka nilaikaḷ)

தகவல்களின் மூலம்:

1. திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு - டாக்டர் சுப. அண்ணாமலை  
2. உண்மை விளக்கம் - https://shaivam.org/   
3. https://thevaaram.org  

திருமந்திரம் கூறும் எட்டு யோக நிலைகளும் (அட்டாங்க யோகம்) அவற்றின் சிறு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  1. இயமம் - விலக்கத்தக்க செயல்கள் யாவை என்று அறிதல்.
  2. நியமம் - கடைபிடிக்க வேண்டியவற்றை முடிவு செய்தல்
  3. ஆதனம் - செய்ய வேண்டிய யோகத்திற்க்கான சிறந்த இருக்கைகள்
  4. பிராணாயாமம் - (Control of praṇa) - பிராணன் அடங்கினால், மனம் அடங்கும். மனம் அடங்கினால், ஐம்புலன் அடங்கும்.
  5. பிரத்தியாகாரம் - ஐம்புலனடக்கம் (sense withdrawal)- ஐம்புலன் அடங்கி புறநோக்கின்றி அக நோக்கம் கொள்வது.
  6. தாரணை - ஒருநிலைப் படுதல் (Unification)- மனம், புத்தி, சித்தம், மற்றும் அகங்காரம் ஒருநிலைப்பட்டு சத்-சித் ஆனந்தத்தில் நிலைபெறுதல்.
  7. தியானம் - ஒன்றை நினைத்தல்
  8. சமாதி – ஒன்றேயாதல்

அட்டாங்க யோகம்:

அந்நெறி, இந்நெறி என்னாதே அட்டாங்கத்  
தன்னெறி சென்று, சமாதியிலே நின்மின்;
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்;
புலநெறி ஆகத்தில் போக்கு இல்லை ஆகுமே
- 545 - அட்டாங்க யோகம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

அந்நெறி, இந்நெறி என்னாதே அட்டாங்கத் தன்னெறி சென்று, - பல நெறிகளை(சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளில்) எண்ணாமல், தன் உடம்பைக் கொண்டு செய்யும் நெறியான அட்டாங்க யோக நெறி செய்து

சமாதியிலே நின்மின்; நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்; - சமாதியில் நின்று நல்ல நெறியில் செல்பவரே ஞானம் எய்துவர்.

புலநெறி ஆகத்தில் போக்கு இல்லை ஆகுமே - அற்பமான பிறவியில் புகும் கதி அவர்க்கு இல்லை.

இயமம் (விலக்கத்தக்க செயல்கள்):

கொல்லான், பொய்கூறான், களவிலான், எக் குணத்தும் 
நல்லான், அடக்கம் உடையான், நடுச் செய்ய
வல்லான், பகுத்து உண்பான். மாசிலான், கள் காமம்
இல்லான் இயமத்து - இடையில் நின்றானே
- 547 - இயமம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

நடுச் செய்ய வல்லான் - சுழுமுனை இயக்கம் செய்யக் கூடியவன்.

கொலை தொழில் செய்யாதவன், பொய் கூறாதவன், திருடுதல் தொழில் செய்யாதவன், எந்த தன்மையிலும் நன்மை செய்பவன், அடக்கம் உடையவன், சுழுமுனை இயக்கம் செய்யக்கூடியவன், பங்கிட்டு உண்பவன், மாசு அற்றவன், கள் உண்ணாதவன், மற்றும் காமம் கொள்ளாதவன் இயமத்தில் நிற்கிறான்.

நியமம் (கடைபிடிக்க வேண்டியவை):

ஆதியை வேதத்தின் அப்பொருளாளனை,
சோதியை, அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னு பராசத்தியோடு உடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே
- 548 - நியமம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

அங்கி - மூலக்கனல்

ஆதியை வேதத்தின் அப்பொருளாளனை சோதியை - உலகைப் படைத்தவனும், வேதத்தின் பொருளாய் உள்ளவனும், சோதியாய் இருப்பவனும் ஆகிய சிவனை,

அங்கே சுடுகின்ற அங்கியைப் - மூலாதாரத்தில் சுடுகின்ற மூலக்கனலைக் கொண்டு,

பாதியுள் மன்னு பராசத்தியோடு உடன் நீதி யுணர்ந்து நியமத்த னாமே - சிவனின் பாதியாகிய பராசக்தியுடன், அவன் சேர்ந்து இருக்கும் நீதி உணர்ந்து சிவனுடன் பராசக்தியை கண்டு மகிழ்வதே நியமம் ஆகும்.

கருத்து: குண்டலினி யோகம் செய்ய வேண்டும் என்று அறிவதே நியமமாகும்.

ஆதனம் (சிறந்த இருக்கைகள்):

“சுவத்தி” ஆசனம்:

பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம்
இங்குளவாறு ஒருநாலும் அவற்றினுள்
சொங்கு இலை ஆகச் சுவத்திகம் என மிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே
- 551- ஆதனம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

பங்கயம் - தாமரை
சொங்கு - குற்றம் / இழிவு

பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம் - தாமரை வடிவம் முதல் பல வடிவங்களில் ஆதனங்கள் உள்ளன

இங்குளவாறு ஒருநாலும் அவற்றினுள் - அவற்றினுள் நான்கு ஆசனங்கள் உள்ளன. அந்த நான்கு ஆசனங்களில்

சொங்கு இலை ஆகச் சுவத்திகம் என மிகத் தங்க இருப்பத் தலைவனும் ஆமே - குற்றம் இல்லாதது (துன்பம் இல்லாதது / எளிமையானது) “சுவத்தி” ஆசனம்(சுவத்திகாசனம்) என்று அந்த ஆசனத்தில் மிகுந்து இருப்பவன் தலைவன்.

பத்திராசனம்(இலை இருக்கை):

துரிசு இல் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து
அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி
உருசியொடும் உடல் செவ்வே இருத்திப்
பரிசு பெறும் - அது பத்திராசனமே
- 553- ஆதனம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

துரிசு - துன்பம்
அங்கை - உள்ளங்கை
உருசி - இன்பம் / விருப்பம்
செவ்வே - நேராக

துரிசு இல் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து - எந்த ஒரு இடர்பாடும் இன்றி வலது காலை தெரியும்படி இடது கால் மேல் வைத்து

அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி - தூய்மையான உள்ளங்கால்களை முழங்கால்களின்(முழங்கால் முட்டி) மேல் நீட்டி

உருசியொடும் உடல் செவ்வே இருத்திப் - இன்பத்துடன் உடலை நேராக நிறுத்தி (முதுகுத் தண்டை நேராக வைக்கவேண்டும்)

பரிசு பெறும் - அது பத்திராசனமே - பயன் பெரும் ஆசனம் பத்திராசனம்.

குக்குட ஆசனம் (மயில்/கோழி இருக்கை):

ஒக்க அடி இணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கைகளில்  ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடில் 
குக்குட ஆசனம்  கொள்ளலும் ஆமே
- 554- ஆதனம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

ஊரு - தொடை
துளங்காது - அசையாமல்
குக்குடம் - கோழி / மயில்
தொக்க - தொகை / பலன்

ஒக்க அடி இணை ஊருவில் ஏறிட்டு - ஒரே நேரத்தில், இரண்டு பாதங்களையும், தொடைகளின் மேல் ஏற்றி (பதுமாசனம்)

முக்கி உடலை முழங்கைகளில் ஏற்றித் - முயன்று முழு உடலையும் கைகளினால் தூக்கி நிறுத்தி (கைகளை தொடைகளுக்கு நடுவில் செலுத்தி உடலை உயர்த்த வேண்டும்)

தொக்க அறிந்து துளங்காது இருந்திடில் - அதன் பலன் அறிந்து அசையாமல் இருந்தால்

குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே - குக்குட ஆசனம் செய்ததாகக் கொள்ளலாம்.

சிங்காதனம் (சிங்க இருக்கை):

பாதம்  முழந்தாளில் பாணிகளை நீட்டி
ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுறக்
கோது இல் நயனம்  கொடி மூக்கிலே உறச்
சீர்திகழ் சிங்காதனம் எனச் செப்புமே
- 555- ஆதனம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

பாணிகள் - கைகள்
கொடி மூக்கு - நுனி மூக்கு
அங்காந்து - கொட்டாவிவிடல்
கோது - நெறிதவறுகை
நயனம் - கண்

பாதம் முழந்தாளில் பாணிகளை நீட்டி ஆதரவோடும் - முழந்தாளிட்டு (முட்டியிட்டு) பாதம் மற்றும் கைகளை நீட்டி, இவைகளின் ஆதரவோடு (முட்டி, கைகள், மற்றும் பாதம்) அமர்ந்து இருக்க

வாய் அங்காந்து அழகுறக் - வாய் கொட்டாவி விடுவதுபோல் திறந்து இருந்து
கோது இல் நயனம் கொடி மூக்கிலே உறச் - நெறி தவறாமல் கண்கள் மூக்கின் நுனியை பார்த்து இருக்க

சீர்திகழ் சிங்காதனம் எனச் செப்புமே - செய்யும் ஆசனம் சிறந்த சிங்காதனம் என்று சொல்லப்படும்.

பிராணாயாமம்:

பிராணாயாமத்தின் தேவையைப் பற்றி படிக்க இங்கே சொடுக்கி “பிராணன் அடங்கினால் மனமும் அடங்கும்” என்ற தலைப்பை பார்க்கவும்.

பிராணாயாமம் செய்யும் காலக் கணக்கு:

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏம் - உற்ற முப்பத்திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலை கண்ணாக இவ்விரண்டு 
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே
- 566- பிராணாயாமம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

வாமம் - இட மூக்கு
பிங்கலை - வலது பக்கத்து நாடி, வலது மூக்கு
கண்ணாக - கண் ஆக - வழியாக
பூரகம் - நிரப்புதல்
இரேசகம் - மூச்சை வெளியிடுதல்
கும்பகம் - மூச்சை உள்ளே நிறுத்துதல் (பிராணன் மேலேயும், அபாணனும் கீழேயும் செல்லாமல் உடலில் நிறுத்துதல்) இங்கே சொடுக்கி
ஓமம் - மூலாக்கினி
மாத்திரை – 2/5(0.4)வினாடி - ஒரு மெய் எழுத்தை உச்சரிக்கும் கால அளவு - கை நொடி - கண் இமைப் பொழுது.
ஏம் - இன்பம்
காமுறுதல் - விரும்புதல்

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே - இடது மூக்கில் 16 மாத்திரை பொழுது உள்ளிழுத்து

ஏம் - உற்ற முப்பத்திரண்டும் இரேசித்துக் காமுற்ற பிங்கலை கண்ணாக - இன்பம் கொண்டு வலது மூக்கு வழியாக விருப்பத்துடன் 32 மாத்திரை மூச்சை வெளியிடவேண்டும்

இவ்விரண்டு ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே - இரேசகமும் , பூரகமும் மூலக்கனலை எழுப்ப 64 மாத்திரை கும்பிக்க வேண்டும். இதுவே உண்மை.

கருத்து: 16 மாத்திரை பொழுது உள்ளிழுத்து, 64 மாத்திரை பொழுது உள்ளே நிறுத்தி, 32 மாத்திரை பொழுது வெளியிடவேண்டும்.

பிரத்தியாகாரம் (ஐம்புலன் அடக்கி உள்நோக்கல்):

ஒருக்கல் உபாதியை, ஒண்சோதி தன்னை,
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்து உணர்வு உன்னல், கரைதல், உள் நோக்கல்
பிரத்தியாகாரப் பெருமையது ஆமே
- 578- பிரத்தியாகாரம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

ஒருக்கல் - ஒடுக்குதல்
உபாதி - குற்றம் / மாயை
உபாதிப் பிரிவை - ஆணவத்தை
சோதி - இறைவன்
உன்னல் - நினைத்தல் / மனம்
கரைதல் - உருகுதல்

ஒருக்கல் உபாதியை - மாயையை ஒடுக்கி

ஒண்சோதி தன்னை, பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்து - இறைவனையும், தன்னையும் பிரித்து உணர வந்த ஆணவத்தை கரைத்து

உணர்வு உன்னல், கரைதல், உள் நோக்கல் பிரத்தியாகாரப் பெருமையது ஆமே - மனதில் அவனை உணர்ந்து, உருகி, புலன் வழி நோக்காமல், உள்முகமாக நோக்குதல் பிரத்தியாகாரம் ஆகும்.

தாரணை (ஒருநிலைப் படுதல்):

தாரணை பற்றி படிக்க இங்கே சொடுக்கி “புலன்களை அடக்க தாரணை செய்க” என்ற தலைப்பை பார்க்கவும்.

தியானம் (ஒன்றை நினைத்தல்):

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை; மனைக்கும் அழிவில்லை;
ஓட்டமும் இல்லை; உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை; சிவன் - அவன் ஆமே
- 597- தியானம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

நாட்டம் - பார்வை
நடுமூக்கில் - புருவ மத்தி

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில் - கண் பார்வையை புருவ மத்தியில் வைத்தால்

வாட்டமும் இல்லை - உடல் தளராது

மனைக்கும் அழிவில்லை - வாழ்க்கைக்கு அழிவு இல்லை

ஓட்டமும் இல்லை - உண்மை காண எங்கும் செல்லவேண்டாம்

உணர்வில்லை - மனஉணர்வு ஒடுங்கும்

தானில்லை - ஆன்ம போதம் அல்லது தற்போதம் கரையும்

தேட்டமும் இல்லை - இறைவனைத் தேடவேண்டாம்

சிவன் - அவன் ஆமே - உயிரே சிவம் ஆகும்

சமாதி (ஒன்றேயாதல்):

கற்பனை அற்றுக் கனல்வழியே சென்று
சிற்பனை, எல்லாம்  சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதியோடு உற்றுத்
தற்பரமாகத் தகும் தண்சமாதியே
- 621 - சமாதி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

சிற்பனை - சிருட்டித் தொழில் செய்பவன்
மதியோடு - சந்திர மண்டலத்தோடு (நெற்றி மற்றும் தலைப் பகுதி)
உற்று - உணர்ந்து
தற்பரமாக - ஆன்மா சிவமாம் தன்மை எய்துமாறு

கற்பனை அற்றுக் கனல்வழியே சென்று - எண்ண ஓட்டத்தை நிறுத்தி, மூலக்கனல் வழியேச் (உயிருணர்வை செலுத்திச்) சென்று

சிற்பனை, எல்லாம் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் - சிருட்டித் தொழில் செய்பவனும், அனைத்தையும் படைத்த பேரறிவு உடையவனும் ஆகிய சிவனை காண முயன்று

புணர்மதியோடு உற்றுத் தற்பரமாகத் தகும் தண்சமாதியே - சந்திர மண்டலத்தோடு சேர்ந்து, தானே பரம் என்று இருக்கும் அவனோடு, அவன் மயமாய் கலந்து நிற்பதே சமாதி.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்