நாலடியார் - சங்க இலக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்

வழங்கியவர் கி.சம்பத், காஞ்சிபுரம் . 22 May 2020

(Naladiyaar - Sanga Ilakiya Padhinenkeezhkanakku nool)
(Nālaṭiyār - caṅka ilakkiya patiṉeṇkīḻkkaṇakku nūl)

பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு நீதிநூல்.

பதினெட்டு நூல்களையும் குறிக்கும் வெண்பா:

“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுக்கங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு”

நூலாசிரியர்:

நானூறு சமண முனிவர்கள்

நூற்சிறப்பு:

இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.

அதாவது;
நான்கு (நாலு) + அடி(கள்) + ஆர் (சிறப்புவிகுதி ) = நாலடியார்.

இது சமண முனிவர்கள் நானூறுபேர் பாடிய நானூறு தனிப் பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
இதனால் இது “நாலடிநானூறு” எனவும் பெயர்பெறும்.
‘வேளாண்வேதம்’ என்ற பெயரும் இதற்கு உண்டு.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.

பாடல்களை அதிகாரமாக வகுத்து அமையச் செய்தவர் பதுமனார்’ என்பதும், இவ்வதிகாரங்களை முப்பாலுக்கும் அடைவுபடுத்தி
உரைகண்டவர் ‘தருமர்’ என்பதும் தெரியவருகின்றன.

பதுமனார், திருக்குறள் நூலைப் போன்று அதிகாரத்திற்குப் பத்துப்பத்துப் பாடல்களாக அமைத்து, நூலை உருவாக்கியிருக்கிறார்.
நூலுக்கு முதற்கண் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல் நீங்கலாக, இந்நூலில் 40 அதிகாரங்களும் 400 பாடல்களும் உள்ளன.

பின்னர், பாலும் இயலும் வகுத்த உரையாசிரியர்கள், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலாகப் பகுத்து, இயல் பாகுபாடுகளும் செய்திருக்கின்றனர்.

அறத்துப்பால் 13 அதிகாரங்களையும் பொருட்பால் 26 அதிகாரங்களையும் காமத்துப்பால் ஓர் அதிகாரத்தையும் ஆக 40 அதிகாரங்களை நாலடிநூல் கொண்டுள்ளது.

வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்றுவிளங்குகிறது.

“சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது” என்பதனால் இதனை அறியலாம்.
இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் பின்வரும் பதினோரு நூல்களுள் நாலடி நூலும் அடங்கி நீதிக்கருத்துக்களை உரைக்கின்றன.

அவையாவன:
திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவைநாற்பது, இன்னாநாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம்,
பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியநூல்கள்.

உலகப் பொதுமறையாம் தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.

*“ஆலும் வேலும் பல்லுக் குறுதி;   
நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி”* என்பதனாலும்,    
(நாலும் = நாலடியார், இரண்டும் = திருக்குறள்) 

“பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்" என்பதனாலும்

இதன்பெருமையை அறியலாம்.

திருக்குறளைப்போலவே நாலடியாரும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்று பகுப்பாக உள்ளது.

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் சிறப்புற நான்கு அடிகளுக்கு மிகாமல் உரைப்பது இந்நூலின்
சிறப்பு இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்கள் பட்டறிந்த உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக்கருத்துக்களாகப் போற்றினர்.

நீதிநூல்களில் இலக்கியச்சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப்படுத்தும் சீரிய கருத்துக்களை உரைக்கின்றன.

பெண்டிர்ச் சிறப்பு:

நல்ல மனைவி இல்லாத வீடு வீடல்ல; அது வொரு காடு என்பதைத பின்வரும் பாடல் அடிகள் தெரிவிக்கிறது.


--------------------------------------------------
"மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்   
காண்டற்கு அரிய தோர்காடு''		(361)
--------------------------------------------------

இல்லாள் ஏற்றம் பெற வேண்டுமாயின் கல்வி மிகவும் இன்றியமையாதது. அக்கல்வியின் சிறப்பினைப் பின்வரும் நாலடிப் பாடல் கூறுகிறது.


--------------------------------------------------
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்   
மஞ்ச ளழகும் அழகல்ல –நெஞ்சகத்து   
நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையாற்   
கல்வி யழகே யழகு.       			(131 )

--------------------------------------------------

பதவுரை:

குஞ்சி யழகும் – தலை மயிர் முடியின் அழகும்,
கொடுந்தாணைக் கோட்டழகும் – வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும்,
மஞ்சளழகும் – மஞ்சள் பூச்சின் அழகும்,
அழகல்ல –அழகுகள் அல்ல,
நெஞ்சகத்து - மனமறிய,
நல்லம்யா மெனும் – நல்லமாக வொழுகுகின்றோம்,
நடுவு நிலைமையால் – உண்மையாக உணரும்,
கல்வி யழகே யழகு - கல்வி யழகே உயர்ந்த அழகாகும்.

பாடலின் கருத்து:

நல்லொழுக்கம் பயக்கும் கல்வியே மக்கட்கு உயர்வான அழகாகும்.

இந்நூலில், செல்வம் நிலையற்றது, அது "சகடக்கால் போல வரும் தன்மையுடையது என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே அச்செல்வம் கைத்துண்டாம்போதே கரவாது அறம் செய்மின்” என மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்