திருமந்திரம் கூறும் தத்துவ தாத்துவிகங்கள்

வழங்கியவர் தசா . 25 Mar 2021

(Thirumandhiram Koorum thathuvangal matrum thathuvigangal)
(Tirumantiram kūṟum tattuva tāttuvikaṅkaḷ)

திருமந்திரம் நூற்குறிப்பு:

திருமந்திரம் தனக்கே உரிய வகையைச் சேர்ந்த கலிவிருத்த யாப்பில் பாடப்பட்ட நூலாகும். திருமூலர், தான் கற்றதை பயிற்சி செய்து அதனால் தான் அடைந்த அனுபவத்தை நூலாக எழுதியுள்ளார்.

இந்நூல் ஒரு அனுபவப் பாட நூலாக இருப்பதால், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமாக இருக்கும். இதுவரை பல பதிப்பாசிரியர்கள் இந் நூலுக்கு விளக்க உரை எழுதியுள்ளனர். ஒவ்வொரு பதிப்பிலும் மாறுபட்ட விளக்கங்களை நாம் காண முடியும். மேலும் இந் நூலில் இடைச்செருகல்கள் மிகுதியாக உள்ளதால், டாக்டர் சுப. அண்ணாமலை அவர்கள் எழுதியுள்ள “மூலபாட ஆய்வுப் பதிப்பு” என்னும் நூலில் இடைச் செருகல்களாக குறிப்பிட்டுள்ள பாடல்களை இந்த கட்டுரையில் நான் உபயோகிக்க வில்லை.

தகவல்களின் மூலம்:

1. திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு - டாக்டர் சுப. அண்ணாமலை  
2. உண்மை விளக்கம் - https://shaivam.org/   
3. https://thevaaram.org  

தத்துவங்கள் ஓர் அணுகுமுறை:

அமைதியாக ஓரிடத்தில் நாம் அமர்ந்திருக்கும் போது சில நேரங்களில் நம்மைக் கடந்து சென்ற ஒரு வாகனத்தின் ஒலியைக் கேட்க மாட்டோம். காரணம், நம் மனம் வேறு ஏதோ ஒன்றின் மேல் கவனத்தைக் கொண்டிருந்தது.

நம் காது அந்த ஒலியைக் கேட்கும் தொலைவிலேயே இருந்தது. நாமும் அந்த இடத்திலேயே இருந்தோம்.ஆயினும் நம் காது அந்த ஒலியைக் கேட்கவில்லை; காது ஒரு கருவி; அக் கருவியைப் பயன்படுத்துபவர், அந்த நேரத்தில் அதை உபயோகிக்க வில்லை.

இதற்குக் காரணம் இக் கருவியைப் பயன்படுத்தியவரின் மனமா? என்ற கேள்வி உதிப்பது சரியே.
மனம் கருவியைப் பயன்படுத்தினால் அந்த கருவியால் கேட்கப்பட்ட ஒலி யாதென்று அதனால் பிரித்து அறியமுடியுமா? முடியாது. மனம் ஒரு இடைக் கருவியே.

கேட்கப்பட்ட அந்த ஒலி வாகனத்தின் ஒலியா, ஒரு மிருகத்தின் ஒலியா அல்லது ஒரு இசையின் ஒலியா என்று பிரித்து அறிவது புத்தி.

இப்பொழுது இந்த கருவியைப் பயன்படுத்தியவரின் புத்தியா? என்ற கேள்வி எழக்கூடும்.
அந்த ஒலியினால் பெறப்பட்ட இன்பத்தை / துன்பத்தை அனுபவிப்பது யார்? புத்தியா?

அனுபவிப்பது ஆத்மாவே.

இங்கே கூறப்பட்ட

வாகனம் என்பது – ஐம்பூதங்களின் அங்கம்
வாகனத்தின் ஒலி என்பது – தன்மாத்திரை / புலன்
காது என்பது – ஞானேந்திரியம் / பொறி
மனம், புத்தி, ஆத்மா என்பது - அந்தக்கரணங்கள்

திருமந்திரப் பாடல்:

முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்பும் மதிள்  உடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்பும் மதிள்  உடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத்தாரே  
        - 327 - யாக்கை நிலையாமை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
        - முதல் தந்திரம்

முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் – 30 + 30 +36 தத்துவ தாத்துவிகங்கள்

செப்பும் மதிள் உடைக் கோயிலுள் வாழ்பவர் – 96 தத்துவங்களை உடைய உடம்பில் வாழும் உயிர்

செப்பும் மதிள் உடைக் கோயில் சிதைந்தபின் - மதிள்களை உடைய கோயில் என்னும் உடல் சிதைந்த பின்

ஒப்ப அனைவரும் ஓட்டெடுத்தாரே - அவர்களுடன் சேர்ந்து ஓட்டம் எடுத்தனர் – 96 தத்துவங்களும் நீங்கின

கருத்து: 96 தத்துவங்கள் உடலைச் சார்ந்தது உடல் நீங்கினால் தத்துவங்கள் நீங்கிவிடும்.

திருமந்திரப் பாடல்:

ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்
ஐவரும் ஐந்து இடம்ஆளக் கருதுவர் 
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க்கு இறை இறுத்து ஆற்றகிலேனே.
        - 2003 - ஐந்திந்திரியம் அடக்கும் அருமை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
        - ஏழாம் தந்திரம்

ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள் – 96 தத்துவ தாத்துவிகங்களில் ஐந்து அமைச்சர்கள் உள்ளனர் - ஐந்து புலன்களே ஐந்து அமைச்சர்கள்

ஐவரும் ஐந்து இடம்ஆளக் கருதுவர் - ஐந்து புலன்களும் ஆட்சி புரிய கருதும் ஐந்து இடங்கள் ஐந்து பொறிகளாகும்

ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில் - சினம் என்றால் கோபம், மிகுந்த அவா அல்லது வெறி

ஐவர்க்கு இறை இறுத்து ஆற்றகிலேனே. - ஐவருக்கும் என்னால் கப்பம் கட்ட இயலாது

கருத்து: புலனடக்கம் இன்றி சினந்து எழுதல் கூடாது.

36 தத்துவங்கள்:

உலகம் (5 பூதங்கள்), இந்த ஐந்து பூதங்களின் பண்புகள்(5 தன்மாத்திரைகள்), இந்த உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் உடல் உறுப்புகள்(5 ஞானேந்திரியங்கள்), இந்த உடல் உறுப்புகளின் மூலம் உருவாக்கப்படும் செயல்கள்(5 கன்மேந்திரியங்கள்) மற்றும் உடல் உறுப்புகளையும் உலகத்தையும் இணைக்கும் கருவிகள்(4 அந்தக்கரணங்கள்) என மொத்தம் 24 தத்துவங்கள் உள்ளன. இந்த 24 தத்துவங்களும் ஆன்ம தத்துவங்கள் எனப்படும்.

இந்த 24 ஆன்ம தத்துவங்கள் இயங்குவதற்கு ஒரு தளம் / இடம் தேவைப்படுகிறது. அந்த தளம் 7 பிரிவுகளாக(7 வித்யாதத்துவம்) பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 7 தளங்கள் இயங்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் 5 ஆற்றல்களாக(5 சிவதத்துவம்) பிரிக்கப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்ட அனைத்து தத்துவங்களும் மும்மலங்களில் ஒன்றான மாயையில் அடங்கும்.

திருமந்திரப் பாடல்:

அறுநான்கு அசுத்தம்; மதி சுத்தாசுத்தம்
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவை மூன்றும், கண்டத்தால் பேதித்து
உறும் மாயை மாமாயை ஆன்மாவினோடே
        - 2241 - கேவல சகல சுத்தம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு
        - எட்டாம் தந்திரம்

அறுநான்கு அசுத்தம்; மதி சுத்தாசுத்தம்
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் – 24 அசுத்தம்; இயற்க்கை அறிவுடைய 7 மாயை சுத்தாசுத்தம், உடன் உறும் 5 சுத்தம்

பெறுமாறு இவை மூன்றும், கண்டத்தால் பேதித்து
உறும் மாயை மாமாயை ஆன்மாவினோடே – மாயை கண்டத்தால் இவை மூன்றும் பேதித்து(மாறுபடுதல்) ஆன்மாவினோடே உறும் மாமாயை

கருத்து: ஆன்மாவினோடே உறும் மாமாயை, மாயை கண்டத்தால் அசுத்தம் - 24, சுத்தாசுத்தம் - 7 மற்றும் சுத்தம் - 5 என்று மூன்று வகையாக அமையும்.

இந்த 36 தத்துவங்கள் கீழே அட்டவணைப் படுத்தப்பட்டு பின் ஒவ்வொன்றாக விவரிக்கப்படும்.

24 ஆன்ம தத்துவங்கள்

ஐந்து சிவதத்துவங்கள் பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.
ஐம்பூதங்கள், தன்மாத்திரைகள் & ஞானேந்திரியம் பற்றி திருமந்திரம் கூறும் கோட்பாடுகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
ஏழு வித்யா தத்துவங்கள் பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.

60 தாத்துவிகங்கள்:

தத்துவங்களில் இருந்து வெளிப்படும் புறநிலைக் கருவிகள் அல்லது தத்துவங்களின் உட்கூறுகள் அல்லது தத்துவங்களால் ஏற்படும் காரியங்கள் தாத்துவிகங்கள் எனப்படும்.

இந்த 60 தாத்துவிகங்கள் கீழே அட்டவணைப் படுத்தப்பட்டு பின் ஒவ்வொன்றாக விவரிக்கப்படும்.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்