திருமந்திரம் கூறும் பத்து வாயுக்கள்

வழங்கியவர் தசா . 05 Sep 2021

(Thirumandhiram Koorum Pattu Vayukkal)

தகவல்களின் மூலம்:

1. திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு - டாக்டர் சுப. அண்ணாமலை 
2. உண்மை விளக்கம் - https://shaivam.org/  
3. https://thevaaram.org 

திருமந்திரம் உடலில் உள்ள வாயுக்களை பத்து கூறுகளாக வரையறுக்கிறது. இந்த பத்து வாயுக்களும் அறுபது தாத்துவிகங்களில் அடங்கும்.

தத்துவ தாத்துவிகங்கள் பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.

உயிருடன் இருக்க உதவுவது:

 1. பிராணன் - இதயம்/நுரையீரலில் இயங்கும் வாயு - இதயம் இயங்கி சுவாசம் விட உதவுகிறது

இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் உண்டாக உதவுவது:

 1. சமானன் - இரைப்பை / சிறுகுடலில் இயங்கும் வாயு - உண்ட உணவை சீரணிக்க உதவுகிறது
 2. வியானன் - உடல் முழுதும் பரவியிருப்பது - இரத்த ஓட்டத்தை உண்டாக்குவது

கழிவுகளை வெளியேற்ற உதவுவது:

 1. அபானன் - கீழ்நோக்கும் வாயு - மலசலம் முதலியவற்றை வெளியேற்றுகிறது

உடல் உறுப்புகளின் மற்ற செயல்களுக்கு உதவுவது:

 1. நாகன் - நீட்டல், முடக்கல், சொல்லல், மற்றும் விக்கல் இவற்றிற்கு காரணமாவது
 2. கூர்மன்(விழிக்காற்று) - இமைத்தல், விழித்தல், மயிர் சிலிர்த்தலை செய்வது
 3. கிரிகரன் - தும்மல், இருமல், வெம்மை, மற்றும் சினம் இவற்றை உண்டாக்குவது.
 4. தேவதத்தன் - ஓட்டம், இளைப்பு, வியர்வை, மற்றும் கொட்டாவி இவற்றை உண்டாக்குவது

உயிர் பிரிய உதவுவது:

 1. உதானன் - மேல்நோக்கும் வாயு - நாபியில் நிற்கும் வாயு
 2. தனஞ்சயன்(வீங்கும் காற்று) - உயிர் பிரிந்த பிறகும், உடம்பில் நின்று, உச்சந்தலை வெடித்து வழிவிடப்போவது

திருமந்திர நூல் முழுவதும் ஆங்காங்கே பிராணன் என்கிற வார்த்தையை காணமுடிகிறது. அபானன், கூர்மன், மற்றும் தனஞ்சயன் என்கிற வார்த்தைகளை ஒருசில இடங்களில் மட்டுமே காண முடிகிறது.

பிராண வாயு மட்டுமே உடலுக்கு வெளியில் இருந்து உடலுக்குள் செல்லும் வாயுவாகும். மற்ற ஒன்பது வாயுக்களுக்கும் பிராணனே ஆதாரமாக அமைகிறது.

பிராணனும் மனமும்:

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கின் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சு அறுவித்துப்
பிராணன் அடைவே பேறு உண்டிடீரே
- 560 - பிராணாயாமம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப் - பிராணன் மனதுடன் பல வழியில் செல்லாமல் அடங்கினால் நிலைபேற்றை அடையும்.

பிராணன் இருக்கின் பிறப்பு இறப்பு இல்லை - அடங்கிய பிராணனால் பிறப்பு இறப்பு இல்லை.

பிராணன் மடைமாறிப் பேச்சு அறுவித்துப்; பிராணன் அடைவே பேறு உண்டிடீரே - பிராணன் வழி மாறி சுழுமுனை வழி செலுத்தி மௌன நிலையை எய்தி உயிர் முறையாகப் பெறும் பேற்றினைப் பெற்று நுகர்வீராக.

இயமனை வெல்லுதல்:

இட்ட தவிடு இளகாதே இரேசித்து,
புட்டிபடத் தச நாடியும் பூரித்து,
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமன் இல்லை தானே
- 567 - பிராணாயாமம் - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

இரேசித்து - மூச்சை வெளியிடுதல்
பூரித்து - மூச்சை உள்ளிழுத்தல்
கும்பித்து - மூச்சை உடம்பினுள் அடக்குதல்
இளகாதே - அசையாதே
புட்டி - நிறைவு
கொட்டி - உள்ளே நிறைத்து
நட்டம் - நிமிர்ந்து
நமன் - இயமன் - யமன்

இட்ட தவிடு இளகாதே இரேசித்து - மூச்சை வெளிவிடும் போது மூக்கின் அருகே ஒரு கையில் தவிடு வைத்தால், அது ஆடாமல் இருக்க வேண்டும். அத்துணை மெதுவாக வெளிவிட வேண்டும்.

புட்டிபடத் தச நாடியும் பூரித்து - மூச்சை உள்ளிழுக்கும் போது உடம்பில் உள்ள 10 நாடிகளும் நிறைவாகக் கிளர்ச்சி பெற வேண்டும்.

கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து - மூச்சினை உள்ளே நிறைத்து நிறுத்தும் போது மேல்பக்கமாகவோ அல்லது கீழ்பக்கமாகவோ வெளியேற இயலாது.

நட்டம் இருக்க நமன் இல்லை தானே - இவ்வாறு செய்யும் போது நிமிர்ந்து இருக்க இயமனை வெல்லலாம்.

அபானன்:

குழவியும் ஆணாம் வலத்தது ஆகின் 
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகின்;
குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கின்;
குழவி அலியாகும் கொண்ட கால் ஒக்கிலே
- 291 - கர்ப்பக் கிரியை - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- இரண்டாம் தந்திரம்

கால் ஒக்கிலே - கால் ஒத்தால் - சூரிய கலையும், சந்திர கலையும் ஒத்து இருத்தல்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகின் - புணர்ச்சிக் காலத்தில் ஆணுக்கு மூச்சு பிங்கலையில் இயங்கினால் ஆண் குழந்தை பிறக்கும்.

குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகின் - இடக்கலையில் இயங்கினால் பெண் குழந்தை பிறக்கும்.

குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கின் - விந்துவோடு செல்லும் பிராணனை அபானன் எதிர்த்தால் இரட்டைக் குழந்தை பிறக்கும்.

குழவி அலியாகும் கொண்ட கால் ஒக்கிலே - மூச்சுக்காற்று இடகலை மற்றும் பிங்கலை இரண்டிலும் ஒரே நேரத்தில் இயங்கினால் குழந்தை அலியாகப் பிறக்கும்.

தனஞ்சயன் - உடலும் உயிரும் பல்லாண்டு கூடியிருக்கும்:

ஒத்த அவி ஒன்பது வாயுவும் ஒத்தபின் 
ஒத்த அவி ஒன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே
- 646 - அட்டமா சித்தி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

அவி - go out, be extinguished, அணை

ஒத்த அவி ஒன்பது வாயுவும் ஒத்தபின் - ஒரே சமயத்தில் உடம்பை விட்டு நீங்கும் தன்மையுடைய ஒன்பது வாயுக்களும் நம் உடம்பை விட்டு விலகாமல் ஒத்து இருக்க

ஒத்த அவி ஒன்பதின் மிக்க தனஞ்சயன் - அந்த ஒன்பது வாயுக்களில் சிறந்ததாகிய தனஞ்சயன்

ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட - அந்த ஒன்பது வாயுக்களுடனும் தனஞ்சயன் கூடியிருக்க

ஒத்த உடலும் உயிரும் இருந்தவே - உடலும் உயிரும் பல்லாண்டு கூடியிருக்கும்.

தனஞ்சயன்:

இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்;
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்; 
இருக்கும் உடல் - அது இருந்தில ஆகில்,
இருக்கும் உடல் - அது வீங்கி வெடித்ததே.
- 647 - அட்டமா சித்தி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில் - ஒன்பது வாயுக்களுடனும் தனஞ்சயன் கலந்து

இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய் - 223 - ஆவது புவனமாகிய அனந்தையில் பொருந்தி இருக்கும்.

இருக்கும் உடல் - அது இருந்தில ஆகில் - அது அவ்வாறு கலந்து இல்லை எனில்

இருக்கும் உடல் - அது வீங்கி வெடித்ததே - அந்த உடல் வீங்கி வெடிக்கும்.

கூர்மன்:

கண்ணில் வியாதி, உரோகம் தனஞ்செயன்;
கண்ணில் இவ்-ஆணிகள், காசம் அவன் அல்லன்
கண்ணில் கூர்மன் கலந்தில ஆதலால் 
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே
- 649 - அட்டமா சித்தி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

காசம் - ஒளி
ஆணிகள் - நரம்புகள்

கண்ணில் வியாதி, உரோகம் தனஞ்செயன்; கண்ணில் இவ்-ஆணிகள், காசம் அவன் அல்லன் - கண்ணில் உள்ள நரம்புகளால் உண்டாகும் ஒளிக்கு வியாதி ஏற்பட்டால் அதற்க்கு காரணம் தனஞ்செயன் இல்லை.

கண்ணில் கூர்மன் கலந்தில ஆதலால்; கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே - கண்ணில் கூர்மன் என்ற வாயு கலக்கவில்லை என்பதே அதற்குக் காரணமாகும்.

பிராணன்

அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி
அஞ்சுடன் அஞ்ச - அது ஆயுதம் ஆவது
அஞ்சு - அது அன்றி, இரண்டு - அது ஆயிரம்
அஞ்சு - அது காலம் எடுத்துளும் ஒன்றே
- 690 - அட்டமா சித்தி - திருமந்திரம் மூலபாட ஆய்வுப் பதிப்பு 
- மூன்றாம் தந்திரம்

அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி - ஐந்து நிறங்களுடன், ஐந்து முகம் உடைய நாயகி (சதாசிவ நாயகி, மனோன்மணி)

அஞ்சுடன் அஞ்ச - அது ஆயுதம் ஆவது - அவளது ஆயுதம் 10 வாயுக்களாம்

அஞ்சு - அது அன்றி, இரண்டு - அது ஆயிரம்; அஞ்சு - அது காலம் - 10 வாயுக்களும் ஐந்து நீங்கி, பிராணன் இரண்டு வழியாக (இடகலை & பிங்கலை) செல்லும். அது ஐந்து நாழிகைக்கு, ஆயிரம் மூச்சாக இருக்கும்.

எடுத்துளும் ஒன்றே - அவள் திருப்பெயர் தியானிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

வரலாற்று தரவுகளிலிருந்து யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள் | பதிப்புரிமை © 2019 தி டேட்டா டாக்ஸ்